சாராய விற்பனை அல்ல... முன்விரோதம் தான் காரணம் - காவல்துறை விளக்கம்

 
murder

மயிலாடுதுறையில் இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு சாராய விற்பனை காரணம் அல்ல எனவும், முன்விரோதம் தான் காரணம் எனவும் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகள் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன்  உள்ளிட்டோர் சாராய விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை கல்லூரி மாணவர் ஹரிசக்தி மற்றும் அவரது நண்பர் ஹரிஷ் ஆகிய இருவரும் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் சாராய விற்பனை தொடர்பாக அந்த இளைஞர்கள் காவல் நிலையத்திலும் தகவல் தெரிவித்ததாக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சாராய வியாபாரிகள் இரண்டு இளைஞர்களையும் கொலை செய்ததாக தகவல் வெளியானது. ராஜ்குமார், தங்கதுரை கைது செய்யப்பட்ட நிலையில் மூவேந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு சாராய விற்பனை காரணம் அல்ல எனவும், முன்விரோதம் தான் காரணம் எனவும் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஒரே தெருவில் வசித்த இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறே சம்பவத்திற்கு காரணம் எனவும், தினேஷ், மூவேந்தன் ஆகியோர் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத் தினத்தன்று மூவேந்தன் உள்ளிட்டோர் தினேஷிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். தடுக்க வந்த ஹரிஷ், சக்தி ஆகியோரை மூவேந்தன் உள்ளிட்டோர் கத்தியால் தாக்கியதில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.