கபி.. கபி.. என இந்தி பாடலை பாடியவாறு மயிலாடுதுறை வயல் வெளியில் நாற்று நடும் வடமாநிலத்தவர்கள்

 
கபி கபி

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இரண்டாவது ஆண்டாக நடவு பணிக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள், களைப்பு தெரியாமல் இருக்க இந்தி பாடலைபாடி உற்சாகத்துடனும்  நாற்றுபரித்து கைநடவு நட்டனர்.

தமிழகத்தில் காவிரி கடைமடை பகுதியாக இருக்கக்கூடிய மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. பம்புசெட் நீர் மற்றும் காவிரிநீரை கொண்டு அதிக அளவில் இப்பகுதியில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்கு தேவையான ஆட்கள் கிடைக்காததால் பல ஆண்டுகளாக விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால் இயந்திரம் மூலம் நடவு மற்றும் அறுவடை செய்யும் பணிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். அறுவடை பணி முழுவதும் இயந்திரம் மூலம் நடந்து வந்தாலும் நடவுப்பணிகளில் இன்னமும் நாற்றுவிட்டு பெண் கூலிதொழிலாளர்களை கொண்டு நடவு செய்யும் பணிகளை பல விவசாயிகள் செய்து வருகின்றனர். 


சம்பா, தாளடி பருவத்தில் அடிக்கடி மழை பெய்யும்  என்பதாலும் இயந்திர நடவு செய்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கரைந்து சேதமடைவதை தவிர்ப்பதற்கான பல விவசாயிகள் பழைய முறைப்படி கூலி ஆட்களை வைத்த நாற்றுப்பறித்து பெண் தொழிலாளர்களை வைத்து நடவு செய்து வருகின்றனர். கூலி தொழிலாளர்கள் 100நாள் வேலைக்கு ஆட்கள் சென்றுவிடுவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாய பணிகளின்போது நூறுநாள் வேலையை நிறுத்தி வைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தும் பயனில்லை. ஆட்கள் பற்றாக்குறையால்   வடமாநில தொழிலாளர்களின் உதவியை விவசாயிகள் நாடியுள்ளனர். மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி பகுதியில் வடமாநில ஆண் தொழிலாளர்கள் விவசாய வேலைகள் செய்து நாற்றுப்பறித்து அவர்களே நடவு செய்யும் பணியில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். 

ஒப்பந்த முறையில் ஏக்கருக்கு 4500 ரூபாய் சம்பளத்தில் 13 தொழிலாளர்கள் நாற்றுபரித்து நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 1 நாளைக்கு 4 ஏக்கர் வரை நடவு பணிகளை செய்து வருகின்றனர். களைப்பு தெரியாமல் இருக்க ஹிந்தி சினிமா பாடல்களை பாடி உற்சாகத்துடனும் மிக நேர்த்தியாக திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்றுபரித்து கைநடவு செய்து வருகின்றனர்.  குறைந்த சம்பளத்தில் வடமாநில தொழிலாளர்கள் விவசாய பணிகளில் ஈடுபடுவது தங்களுக்கு வரபிரசாதமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.