ஓடும் ரயிலில் பயங்கர தீவிபத்து: கதறி கொண்டு ஓடிய பயணிகள்... பயணிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றம்..!

 
1

பஞ்சாப் மாநிலம் ராஜ்புரா அருகே வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 1 மணி அளவில், அம்ரித்சர் - ஜல்பைகுரி கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயிலின் (வண்டி எண்: 12508) நான்கு பொதுப் பெட்டிகளில் (General Coaches) திடீரென தீப்பற்றி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மின் விசிறியில் ஏற்பட்ட மின் கசிவே காரணம்:

சதுகர் கிராமத்தைக் கடந்து, ராஜ்புராவிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள சராய் பஞ்சாரா - பசந்த்புரா இடையே ரயில் சென்றுகொண்டிருந்தபோது, எஞ்சினுக்கு அடுத்து இருந்த முதல் பொதுப் பெட்டியின் மின் விசிறியில் ஏற்பட்ட மின் கசிவு (Short Circuit) காரணமாகத் தீப்பற்றியதாக ரயில்வே காவலறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின் விசிறியிலிருந்து பொறி பறந்ததை நேரில் பார்த்ததாகப் பயணிகளும் தெரிவித்துள்ளனர்.

புகை வேகமாகப் பரவியதைக் கண்டு பயணிகள் கூச்சலிட்டதை அடுத்து, ரயிலின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார். பொதுப் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருந்ததால், முதல் பெட்டியிலிருந்த பயணிகள் உடனடியாக அடுத்தடுத்த பெட்டிகளுக்கு நகர்ந்து தப்பியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் தீ அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவியது.

மீட்புப் பணிகள் மற்றும் சிகிச்சை:

சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்தில் பலத்த சேதமடைந்த 3 பெட்டிகளுடன், கதவு சேதமடைந்த 4-வது பெட்டியும் ரயிலில் இருந்து துண்டிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் காயமடைந்த பயணிகள் ராஜ்புரா மற்றும் ஃபதேகர் சாஹிப் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜ்புரா சிவில் மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சரண்பிரீத் சிங் கூறும்போது, "லேசான தீக்காயம், சிராய்ப்பு மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட 15 பயணிகள் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். இதில் 8 பேருக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அனைவரது நிலையும் சீராக உள்ளது," என்றார். ஃபதேகர் சாஹிப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு பயணியும் சிகிச்சைக்குப்பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பயணியின் அனுபவம்:

காயமடைந்த மணிந்தர் மோகன் (56) என்ற பயணி கூறுகையில், "நான் முசாபர்பூர் செல்ல வேண்டியவன். பெட்டியில் புகை சூழ்ந்ததால் ரயிலில் இருந்த அவசர கால ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே குதித்தேன். இதில் எனக்கு லேசான காயம் ஏற்பட்டது," எனக் கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பாலா ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) வினோத் குமார் பாட்டியா மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு, அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர மாற்று நிவாரண ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.