தாம்பரம் மாநகராட்சி செய்த மாஸ் கௌரவம்! தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்..!

 
1

தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு நிர்வாக மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும் இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலைக்கு இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வீரமரணம் அடைந்த, சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பெயரை சூட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய ராணுவத்தில் பணியாற்றிய மேஜர் முகுந்த் வரதராஜன் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்தவர். அவரது தியாகத்தை பாராட்டும் வகையில் அவரது மரணத்திற்குப் பிறகு இந்தியாவின் உயரிய வீர விருதான 'அசோக சக்ரா' விருது வழங்கப்பட்டது.

மேலும் மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினர் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது வீர தியாகத்தை நினைவு கூறும் வகையில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை செல்லும் பிரதான சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என பெயரிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி கடிதம் மூலம் அறிவுறுத்தி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023-இன் பிரிவு 186 இன் படி, சாலையின் பெயர் மாற்றத்திற்கு தாம்பரம் மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெற தேவையான அனுமதி கோரி மாநகராட்சி சார்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதையடுத்து நேற்று தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என பெயரிடுவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. வீரத் தியாகி மேஜர் வரதராஜனின் நினைவை போற்றும் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.