18 வயதுக்கு முன் திருமணமா? 2 ஆண்டு ஜெயில் தண்டனை! திருவாரூர் ஆட்சியர் எச்சரிக்கை!

 
marriage

குழந்தை திருமணங்களைத் தடுப்பது குறித்த முக்கியமான ஆய்வுக் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வளரிளம் பருவத்தில் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பத்தைத் தவிர்க்க பள்ளிகளில் மாணவியருக்குத் தொடர் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த உத்தரவிடப்பட்டது. மேலும் சமூக நலத்துறை, அங்கன்வாடி மையங்கள் மற்றும் கிராம சபை கூட்டங்கள் மூலமாகப் பெற்றோர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் திருமணத் தரகர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை உருவாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

வளரிளம் பருவத்தில் கர்ப்பம் அடைவது பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்வையும் கல்வியையும் பெருமளவில் பாதிக்கும் ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாகும். சிறிய வயதில் கர்ப்பமாவதால் பெண்களுக்கு உடல் உயரம் மற்றும் எடை குறைதல், உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, தடைபட்ட பிரசவம், குறைந்த எடையில் குழந்தை பிறத்தல், மற்றும் மகப்பேறு அல்லது குழந்தை மரணம் போன்ற தீவிரமான மருத்துவ சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால், பெண் குழந்தைகளின் கல்வியையும் ஆரோக்கியமான எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.  

எனவே, 18 வயதிற்கு முன்பாக பெண் குழந்தைகளுக்குக் கட்டாயம் திருமணம் செய்யக் கூடாது என்றும், சட்டத்தை மீறி 18 வயதிற்கு முன் குழந்தை திருமணம் செய்து வைத்தால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கூட்டத்தில் கடுமையாக எச்சரிக்கப்பட்டது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இளம் பருவத்தினருடன் திறந்த மனதுடன் கலந்துரையாட வேண்டும் என்றும், பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்தி, பாலியல் மற்றும் இனப்பெருக்க நலன் குறித்த சரியான விழிப்புணர்வை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.  

ஒருவேளை வளரிளம் பெண்கள் கர்ப்பம் தரித்தால், அதுகுறித்த தகவலை உடனடியாக '1098' என்ற குழந்தைகள் உதவி எண்ணிற்குத் தெரியப்படுத்த வேண்டும். ஆரம்பகால கர்ப்பமாக இருந்தால் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து உரிய ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். முழு கால கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில், முறையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கி பிரசவத்திற்குப் பின் குழந்தையைக் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். "இளம் வயது கர்ப்பதைத் தடுப்போம்; பெண் குழந்தைகளின் கல்வியையும், ஆரோக்கியமான எதிர்காலத்தையும் பாதுகாப்போம்" என்ற விழிப்புணர்வுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.