5 பேர் உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பு- உடற்கூராய்வில் வெளியான பகீர் காரணம்
வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த 5 நபர்களின் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆறாம் தேதி மெரினாவில் நடந்த வான்சாகச நிகழ்ச்சியில் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான்(56), பெருங்களத்துரைச் சேர்ந்த சேர்ந்த சீனிவாசன், ஆந்திராவைச் சேர்ந்த தினேஷ் குமார் வர்ணம்(37), திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன்(34), மரக்காணத்தைச் சேர்ந்த மணி( 37)ஆகியோர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக அண்ணாசதுக்கம் காவல்நிலையம், திருவல்லிக்கேணி காவல் நிலையம், மயிலாப்பூர் காவல் நிலையம், மெரீனா காவல் நிலையம், ராயப்பேட்டை காவல் நிலையம் என தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 194 BNSS - இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டு பின் உடல்கள் அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் உடற்கூராய்வில் உயிரிழப்புக்கான முதல் கட்ட தகவல்கள் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீனிவாசனின் இதயத்தில் அடைப்புகள் இருந்துள்ளதாகவும், ஜான் என்பவர் Low BP மூலமாக மயக்கம் ஏற்பட்டு பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், தினேஷ் குமார் வர்ணம் மற்றும் மணி ஆகியோர் மாரடைப்பு காரணத்தினால் உயிரிழந்ததாகவும் உடற்கூராய்வின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த ஐந்து நபர்களின் துல்லிய காரணத்தை கண்டறிய ஐந்து நபர்களின் உடல் உள்ளுறுப்பு சாம்பில்கள் தடயவியல் துறை "விஸ்ரா" ஆய்வுக்கு காவல்துறை அனுப்பியுள்ளது. "விஸ்ரா" ஆய்வின் முடிவில் மேற்கண்ட பிரேத பரிசோதனை முதற்கட்ட விசாரணை தகவல்கள் மட்டும் காரணமாக அமைந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற துள்ளிய தகவல்கள் கிடைத்து விடுமென போலீசார் தெரிவித்துள்ளனர்.