நான் சினிமாவுக்கு வர காரணமே அவர்தான் - நடிகர் விஜய் பற்றி மாரி செல்வராஜ் பகிர்ந்த ரகசியம்..!

 
1

தூத்துக்குடி வ.உ.சி. கலைக்கல்லூரியின் 75-ஆவது பவள விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்தார். “செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கும். இது ஒரு வரலாற்று மற்றும் அரசியல் சார்ந்த திரைப்படம். என் கரியரில் மிகப்பெரிய படமாக இது அமையும்,” என்றார். மேலும், ‘வாழை’ திரைப்படத்தை ஆறு சீசன் வரை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

தென் மாவட்டங்களில் நடைபெறும் ஜாதி ரீதியான வன்முறைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஜாதி, மதம், பிரிவினைவாதம் போன்றவை சட்டத்திற்கு எதிரானவை. சட்டம் மட்டுமின்றி மனித மனங்களும் மாற வேண்டும். அனைவரும் சமம் என்ற உணர்வு சமூகத்தில் வலுப்பெற வேண்டும். மனிதர்களின் அகத்தோடு பேசும் படைப்புகள் இப்போது வரத் தொடங்கியுள்ளன. ஜாதி, மத பிரச்சினைகள் அவசியமற்றவை,” என்றார்.

“எதற்காக நடந்தாலும் வன்முறை தவறு. மனித வாழ்வின் மிகப்பெரிய சந்தோஷம் சேர்ந்து வாழ்வதே. அடுத்த தலைமுறைக்காக பொறுப்புடன் நடக்க வேண்டும். சமூகத்தின் முக்கியத் தேவையே உரையாடல். இதுபோன்ற விஷயங்கள் வீடுகளிலும் பேசப்பட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.சினிமாவில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி பேசுகையில், “இன்றைய இயக்குநர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் வருகின்றனர். ஒரு சாதாரண மாணவன் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணம் குறைந்தபட்சம் இருக்கிறது. பெரிய மார்க்கெட்டுக்காக சில சமயங்களில் மாற்றங்கள் நடந்தாலும் அதை தவிர்க்க முயற்சிகள் உள்ளன” என்றார்.

தனது படைப்புகள் குறித்து, “நான் இதுவரை ஐந்து படங்கள் எடுத்துள்ளேன். அவை அனைத்தும் சில முக்கியமான கருத்துகளை வலியுறுத்துகின்றன. அதுவே எனக்கு மதிப்பை பெற்றுத்தந்தது. தற்போது நான்கு முக்கியமான படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன். சமூக மாற்றத்திற்காக என் ஆயுதம் சினிமாதான்.

சினிமாவை மிகவும் நேசித்து, அதன் வலி–வேதனைகளை அனுபவித்து, பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து கடந்த 18 வருடங்களாக இந்தப் பயணத்தில் இருக்கிறேன். இன்னும் என்னை வலுப்படுத்திக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். நான் தேர்ந்தெடுத்த பாதை சினிமா என்றாலும், அது இயல்பாகவே அரசியலோடு இணைந்த பயணமாக உள்ளது. அரசியலுக்கு வர வாய்ப்பில்லை” என்றார்.

நடிகர் விஜய் குறித்து பேசுகையில், “சிறுவயது முதல் அவரை மிகவும் பிடிக்கும். நான் சினிமாவிற்கு வந்ததற்குக் காரணமே விஜய். அவரின் அரசியல் நிலைப்பாடு முழுமையாக வெளிப்படும் போது புரிந்துகொள்ள முடியும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; வரவேற்க வேண்டும்,” எனக் கூறினார்.