மார்ச் 22ல் கிராம சபை கூட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மார்ச் 22ல் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தன்று நடக்க உள்ள கிராம சபை கூட்டத்தில், மழை நீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக கிராமசபை கூட்டத்தில் விவாதிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுதல் குறித்தும் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர், பொன்னையா, அனைத்து மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபை, 2025ம் ஆண்டுக்கான உலக தண்ணீர் தினத்தினை, 'பனிப்பாறை பாதுகாப்பு' என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் கிடைத்திட வேண்டும், என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால், உலக தண்ணீர் தினத்தன்று நடத்தும் கிராம சபை கூட்டத்தில், மழை நீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், தண்ணீர் மாசுபாட்டை தடுத்தல், நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றுதல், நீர் வழித்தடங்களை துார்வாருதல், குழந்தைகளிடத்தில் நீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்தவேண்டும். கடந்த ஆண்டு ஏப்.,1 முதல், நடப்பாண்டு பிப்., 28 ம்தேதி வரை கிராம ஊராட்சி பொது நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்களுக்கு கிராம சபையில் ஒப்புதல் பெறவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.