’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி- 25,000 இருக்கைக்கு 40,000 பேர் வந்ததால் சிக்கல்
சென்னை அடுத்த பனையூரில் "மறக்குமா நெஞ்சம்" என்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடியான நிலையில், நிகழ்ச்சி நடந்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் நடைபெற்ற “மறக்குமா நெஞ்சம்” என்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நேற்று மாலை துவங்கி இரவு வரை நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முறையாக நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக இருக்கை வசதி, வாகன நிறுத்த வசதி, குடிநீர் உள்ளிட்டவை சரியாக ஏற்பாடு செய்யவில்லை என்று புகார் எழுந்தது. அதேபோல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், முதல்வர் கான்வாய் வாகனனும் சிக்கி எதிர்திசையில் மாற்றி விடப்பட்டது.
இந்நிலையில் நிகழ்ச்சி நடந்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வு செய்து நிகழ்ச்சி முன் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனத்தை விசாரிக்க அழைப்பு விடுத்த நிலையில், அவர்கள் ஆஜராகவில்லை. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ, “நிகழ்ச்சி ஏற்பாடு ஒரு வாரமாக நடைபெற்றது. எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் இருந்தது. 25,000 இருக்கைகள் போடப்பட்டது. ஆனால் 40,000 பேர் வரை வந்ததாக தெரிகிறது. சொந்த வாகனங்களில் அதிகபடியானோர் வந்ததால் வாகனங்களை தடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காரணம் குறித்து விசாரிக்கவும், ஏற்பாடுகள் குறித்தும், எதிர்காலத்தில் இடைஞ்சல் இல்லாமல் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்படும். விழா ஏற்பாட்டு நிர்வாகிகளிடம் விசாரணை செய்ய உள்ளோம்” என தெரிவித்தார்.