மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி சர்ச்சை : இழப்பீடு வழங்க உத்தரவு..!

 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் சென்னை அருகே பனையூர் ஆதித்யராம் பேலஸ் சிட்டியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை காண ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் பெற்றிருந்தனர். இதற்காக பல கிலோ மீட்டர் பயணித்து ரசிகர்கள் சென்னைக்கு படையெடுத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்குப் போதுமான எந்தவித வசதியையும் ஏற்படுத்தித் தராமல் அலைக்கழித்து, இறுதியில் பெரும்பாலான ரசிகர்கள் நிகழ்ச்சியிலேயே கலந்துகொள்ள முடியாத அளவுக்கு வெளியில் நின்ற படி வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட ரசிகர்கள் தங்களின் வருத்தங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் திரும்பிச் சென்றவர்களுக்கு டிக்கெட் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும், இல்லையெனில் வேறு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் கரூரை சேர்ந்த அஸ்வின் மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் வந்திருந்தார். இருந்தும் நிகழ்ச்சியை காண முடியாததால், திரும்பிய நிலையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் மீது அஸ்வின் மணிகண்டன் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்த விசாரணையில் டிக்கெட் தொகை ரூ.12 ஆயிரம், இழப்பீடு ரூ.50 ஆயிரம், செலவுத்தொகை ரூ.5,000 என மொத்தம் ரூ.67,000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.