"எண்ணங்களை அழுக்காக்கும் விஷயங்களை மாணவர்கள் புறந்தள்ள வேண்டும்" - முதல்வர் ஸ்டாலின்

 
mk stalin

திமுக ஆட்சி காலத்தில் சிறுபான்மையினர் நலனுக்கான பல பணிகள் செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இப்படி இளம் பேச்சாளர்களைக் கண்டறிந்து, ஊக்குவிக்கும் அந்தப் பணியை நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் செய்திருக்கிறார்கள். நான் நினைத்துப் பார்க்கிறேன், இப்போது மட்டும் தலைவர் கலைஞர் அவர்கள் இருந்து இந்தக் காட்சியை பார்த்திருந்தால் அவரைவிட மகிழ்ச்சி அடையக்கூடியவர்கள் யாரும் இருக்க முடியாது. நாமெல்லாம், ஆற்றலோடு அல்ல, ஏதோ ஓரளவுக்கு பேசக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு வந்திருக்கிறது என்றால், அதற்கெல்லாம் காரணம் எத்தனையோ பேர் இருக்கலாம் அதில் முக்கிய காரணமாக இருந்தவர் யார் என்று கேட்டால், நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் தான். சட்டமன்றத்தில், அதேபோல மக்கள் மன்றத்தில் பேசக்கூடிய பேச்சுக்களை எல்லாம் நான் கேட்பதுண்டு. அவரே பலமுறை என்னிடத்தில் சட்டமன்றத்தில் சொல்லியிருக்கிறார். அமைதியாக உட்கார்ந்துகொண்டு இருக்கக்கூடாது. எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி, ஆளும்கட்சியாக இருக்கும்போதும் சரி, சட்டமன்றத்தில் அப்போதைக்கப்போது எழுந்து சில கேள்வியை கேட்கவேண்டும். எனக்கு இப்படிப்பட்ட பல அறிவுரைகளை ஆலோசனைகளை எல்லாம் வழங்கியவர் நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் அவர்கள். அதையெல்லாம் இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன். எனவே தலைவர் கலைஞருடைய இதயத்தில் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றவராக விளங்கியவர் நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் அவர்கள். அதே அன்போடும், அதே நட்புணர்வோடு இன்றைக்கு அவருடைய மகனாக இருக்கக்கூடிய இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடத்திலும் அந்த அன்பை பெற்று வைத்திருக்கிறார் என்பதை எண்ணிப்பார்த்து நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.

stalin

அதேபோல, மாண்புமிகு செஞ்சி மஸ்தான் அவர்களைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக அவர் ஆற்றி வரும் பணிகளையெல்லாம் நீங்கள் நன்கு அறிவீர்கள். நமது திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும் ஆட்சிப் பொறுப்பேற்கிறதோ, அப்போதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக போராடக்கூடிய, வாதாடக்கூடிய, சாதனைகளை தீட்டக்கூடிய பல்வேறு பணிகளை நிறைவேற்றி தந்திருக்கிறது என்பதெல்லாம் ஒரு மிகப் பெரிய வரலாறு. 2007-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி. "உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்" 2009-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த நல வாரியத்தில் இதுவரை 15 ஆயிரத்து 327 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்களுக்கான விடுதிகள் தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் முதல்முறையாக துவங்கப்பட்டது.

stalin

இந்த வரலாற்றின் நீட்சியாக நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, செய்து வரும் திட்டங்களை மட்டும் இங்கே நான் ஒன்றிரண்டு மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியருக்கு, புத்த பூர்ணிமா, மஹாவீர் ஜெயந்தி, பக்ரித், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற சிறுபான்மையினர் பண்டிகைகளுக்கு சிறப்பு உணவு வழங்க ஆணையிட்டுள்ளோம். 14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில், 14 இலட்சம் ரூபாய் செலவில் “செம்மொழி நூலகங்கள்" ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, 5 லட்சத்து 90 ஆயிரம் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்க ஆணையிடப்பட்டு கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு 2021-2022ஆம் ஆண்டு முதல் 1 இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

MK Stalin

கிராமப்புற சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில, 3 முதல் 6-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு 3 கோடியே 59 இலட்சத்து 90 ஆயிரம் செலவில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 3987 பயனாளிகளுக்கு 10 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இப்படி சிறுபான்மையினர் நலன் காக்கும் ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசின் மூலமாக நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். சிறுபான்மையினர் உரிமைகளைக் காக்க மக்கள் மன்றத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து செயலாற்றிடும் என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, அதேநேரத்தில் மாணவர்களிடம் நான் வேண்டுகோளாக வைப்பதெல்லாம், நம்முடைய தமிழ்நாட்டுக்கு என்று தனி குணம் உண்டு. சமத்துவம் - சகோதரத்துவம் - சமூகநீதி சுயமரியாதை பகுத்தறிவு என்று பண்பட்ட பண்பாட்டைக் கொண்ட நம் தமிழ் மண்ணின் உணர்வை நீங்கள் அனைவரும் பெற வேண்டும். ஒற்றுமையோடு வேற்றுமை இல்லாத தமிழ்நாட்டை நோக்கி நமது சமூகத்தை வழிநடத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மனிதநேயத்தைப் போற்றுங்கள். உங்கள் எண்ணங்களை அழுக்காக்கும் கருத்தியல்களைப் புறந்தள்ளுங்கள். நல்லிணக்கத்தின் பண்பை மாணவர்களாகிய நீங்கள் தொடர்ந்து எடுத்துச் செல்லுங்கள் என்றார்.