ஆய்வு முடிவை ஐஐடி இயக்குனர் காமகோடி மறுக்கிறாரா? - மனோ தங்கராஜ் கேள்வி

கோமியம் குறித்த இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் முடிவை ஐஐடி இயக்குனர் காமகோடி மறுக்கிறாரா? என முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசிய ஐஐடி இயக்குனர் காமகோடி, “கோமியம் சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது. காய்ச்சலைக் குணமாக்கும். பாக்டீரியா பாதிப்பு, பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராகக் கோமியம் செயல்படக் கூடியது. மேலும் இது, செரிமான கோளாறு உள்ளிட்ட உடல் பாதிப்புகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது” எனப் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். கோமியம் குறித்து பேசியது தொடர்பாக அவர் மீண்டும் விளக்கமளித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதற்கான 5 ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் ஒரு காப்புரிமை தொடர்பான அறிக்கை என்னிடம் உள்ளது என கூறினார்.
இந்த நிலையில், கோமியம் குறித்த இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் முடிவை ஐஐடி இயக்குனர் காமகோடி மறுக்கிறாரா? என முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆய்வில், மாட்டின் சிறுநீரில் மனிதருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாக உறுதிப்பட தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவை ஐஐடி இயக்குனர் காமகோடி மறுக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.