மன்னார்குடி அருகே குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சி...தந்தை, மகள் பலி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் தந்தை மற்றும் மகள் உயிரிழந்துள்ள நிலையில், தாய் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அசோக் குமாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமாகி வந்த நிலையில், அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதனையடுத்து அசோக் குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில் மூவரும் மயக்கமடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்ததில் அசோக் குமார் மற்றும் அவரது மகள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. அவரது மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த அசோக் குமார் மற்றும் அவரது மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.