முடிவுக்கு வருகிறது மாஞ்சோலை எஸ்டேட் - வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார் வேதனை

 
tn

தமிழ்நாட்டில் தேயிலைத் தோட்டங்களின் பசுமையான அழகுக்கு பின்னால் சோக கதைகளும் நிறைந்திருக்கிறது. குறிப்பாக அதிக சுரண்டல்களையும் கொடுமைகளும் அனுபவித்தவர்கள் தேயிலை தொட்டு தொழிலாளர்கள். இந்நிலையில்  மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் இன்றைய வாழ்க்கை நிலை என்ன? என்பது குறித்து வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அவை பின்வருமாறு :- 

tn
முடிவுக்கு வருகிறது மாஞ்சோலையின் சாம்ராஜ்யம் :

கூலித் தொழிலாளர்களின் மகனாக நாலுமுக்கு எஸ்டேட்டில் பிறந்து வளர்ந்து, கல்விக்காக அங்கிருந்து வெளியேறிய பின்னர், கிராம / நகர வாழ்விலும், கல்லூரி படிக்கையில் மனித உரிமைத் தளத்திலும், பின்னர் வழக்கறிஞர் தொழிலிலும் கிடைத்த அனுபவங்களின் வாயிலாக, கடந்த ஓராண்டு காலமாய் எம்மக்களின் வாழ்வினைத் தொடராய் இங்கு பதிவு செய்துவருகிறேன்.


எங்கள் எஸ்டேட் இனி தொடர்ந்து இயங்குவதற்கு எவ்வித சாத்தியக்கூறும் இல்லை என புலனானதைத் தொடர்ந்து, எஸ்டேட் மக்களின் வாழ்வியலை எனது பார்வையில் பதிவுசெய்யும் நோக்கில் இந்த தொடரை எழுதத்துவங்கி, தற்போது அதன் இறுதிப்பகுதிக்கு வந்தாயிற்று.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ளது கல்லிடைக்குறிச்சி. அங்கிருந்து மணிமுத்தாறு அணைக்கட்டினை கடந்து சுமார் 16 கிலோ மீட்டர் மலையேறினால் மாஞ்சோலை எஸ்டேட்டை அடையலாம். 1927ஆம் ஆண்டுவாக்கில் அங்கு முதன்முதலாக வந்தபோது அந்தப் பகுதியில் காட்டு மா மரங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால், “மாஞ்சோலை” என்று பெயரிட்டனர் என்று சொல்லப்படுகிறது. ரிஷி ஓடை, சுண்ணாம்பு டிவிசன், மாஞ்சோலை என மூன்று பகுதிகளால் ஆனது மாஞ்சோலை.

tn

கம்பெனியின் மாஞ்சோலை குருப் ஆபீஸ், தேயிலைத் தொழிற்சாலை, தங்கியிருந்து சிகிச்சை பெரும் அளவுக்குப் பெரிய மருத்துவமனை, மருத்துவர் இல்லம், கம்பெனியின் கண்காணிப்பாளர் இல்லம், தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி, மாணவர் விடுதி, காவல் நிலையம், வாக்கி டாக்கி நிலையம், தபால் நிலையம், வேறெங்கும் தயாராகாத சிறந்த சுவைகொண்ட டீ ரஸ்க் கிடைக்கும் எஸ்டேட் பேக்கரி, இந்து, கிறித்தவ, இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்கள் எனப் பலவும் மாஞ்சோலையில் அமைந்துள்ளன.

அதிக குளிரும், அதிக வெயிலும் அடிக்காத காலநிலை கொண்ட பகுதி. மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி என ஐந்து எஸ்டேட்டுகளைக் கொண்டது அப்பகுதி என்றாலும், அந்த மலையின் முதல் குடியிருப்புப்பகுதி என்பதால், அங்குள்ள எஸ்டேட் பகுதிகள் முழுக்க “மாஞ்சோலை எஸ்டேட்” என்றே வெளியுலக மக்களால் அடையாளம் கொள்ளப்படுகிறது.

அங்கிருந்து சுமார் 20 நிமிட பேருந்து பயணத்தில் “காக்காச்சி” எஸ்டேட். இதற்குள் 12 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்திருப்போம். சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள அப்பகுதியே இந்த சாலையில் மிக உயரமான இடமாகும். அங்கு அதிகமாக அடிக்கும் குளிர் காரணமாக, காகம் அந்த பகுதிக்கு வருவதில்லை. காகம் பறக்காத காக்காச்சி என்று அந்த பகுதிக்கு பெயர் வந்ததாகச் சொல்வர். காக்காச்சி மலையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட சந்தன மரம் தான் திருச்செந்தூரில் கொடிமரமாக வைக்கப்பட்டது என சொல்லக்கேள்வி.

காக்காச்சியிலிருந்து அடர் வனத்துக்குள் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் கொஞ்சம் இறக்கமான பகுதியில் அமைந்துள்ளது 1940ஆம் ஆண்டு வாக்கில் உருவாக்கப்பட்ட நாலுமுக்கு எஸ்டேட். அங்குள்ள எஸ்டேட்டுகளில் மையப்பகுதி. கம்பெனியின் பதிவேடுகளில் மணிமுத்தாறு எஸ்டேட் என்று பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு என்று கீழே ஒரு ஊர் இருப்பதால், பெயர் குழப்பம் வராமலிருக்க மணிமுத்தாறு எஸ்டேட், நாலுமுக்கு எஸ்டேட் என அழைக்கப்பட்டது. அங்கு ரொட்டிக்கடை முக்கு, பப்பு கங்காணி முக்கு, மாட்டுப்பட்டி முக்கு/ 10ஆம் காடு முக்கு, 1ஆம் காடு முக்கு என நான்கு முக்குகள் இருந்ததின் காரணமாக, நாலுமுக்கு என பெயர் வந்தது.

நாலுமுக்கிலிருந்து மேற்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஊத்து எஸ்டேட் அமைந்துள்ளது. எஸ்டேட் பதிவேடுகளில் அது மஞ்சனம்பாறை. சுருக்கமாக எம்பி டிவிஷன். திரும்பிய பக்கமெல்லாம் ஆரஞ்சு மரங்கள் நிரம்பிய பகுதி ஊத்து. அந்தப்பகுதியில் குடியிருப்பு கட்டவும், தேயிலை நடவும் குழிதோண்டிய பல இடங்களில், தண்ணீர் ஊற்று பொங்கி வந்ததால், ஊத்து என்றானது. அங்குள்ள லுக் அவுட் என்ற இடத்திலிருந்து பார்த்தால் காரையாறு, பாபநாசம், சேர்வலாறு என மூன்று அணைக்கட்டுகள் தெரியும். அதன் இடது புறத்தில் மிக அருகில் அகஸ்திய மலை தென்படும்.


அங்கிருந்து 7 கிலோமீட்டர் சென்றால் குதிரைவெட்டி. அதுவே அங்குள்ள கடைசி எஸ்டேட். சமதளமாக இருக்கும் அந்த பகுதியில் துவக்ககாலத்தில் ஆங்கிலேயர் தங்களது குதிரையைக் கட்டியதால் குதிரைவெட்டி என ஆனதாகச் சொல்வர். அந்த மலையின் சாலை அதோடு முடிவடைந்துவிடும். அதற்கடுத்து முழுக்க அடர்வனம். அதனால், எஸ்டேட்டுக்குச் செல்பவர்கள் தவிர்த்து வேறெவரும் அந்த சாலையில் செல்வதற்குக்கூட வாய்ப்பேயில்லை. கீழிருந்து மலைக்குமேல் வரையிலும் சுமார் 15 அடி அகலமுள்ள குறுகலான பேருந்துப் பாதை. மலையில் ஏறும் அதே பாதையில்தான் கீழேயும் வந்தாகவேண்டும்.


நாலுமுக்கிலிருந்து தெற்கு பக்கம் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேல் கோதையாறு அணைக்கட்டுப் பகுதியானது, கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்கைக்குள் வரும். அங்கு செல்ல ஒரே சாலை மார்க்கம் எஸ்டேட் வழி செல்லும் சாலைதான். அதனைத்தவிர்த்து, அங்கிருந்து விஞ்ச் மூலமாகவும் பயணிக்கலாம். அங்குள்ள 2 அணைக்கட்டுகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு அணைக்கட்டுகளை ஒரே இடத்திலிருந்து பார்க்க இயலும் அந்தப்பகுதியில் வரையாடுகளை சாதாரணமாகக் காணலாம்.எஸ்டேட் பகுதியில் வெட்டவெளியாக இருக்கும் சில குறிப்பிட்ட இடங்களிலிருந்து இரவு நேரத்தில் பார்த்தால், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் எரியும் மின் விளக்குகள், வழக்கமாக அண்ணாந்து பார்த்தால் மட்டுமே தெரியும் நட்சத்திரங்களை பள்ளத்தில் காண்பதுபோல காட்சியளிக்கும்.


எஸ்டேட் பகுதிகள், வருவாய் கணக்குகளில் ஜமீன் சிங்கம்பட்டி கிராமம், பகுதி 2, சர்வே எண் 251 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வனப்பகுதி `சிங்கம்பட்டி எஸ்டேட்' என்று அரசு ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டு வந்த காரணத்தால், எஸ்டேட் பகுதியை `சிங்கம்பட்டி குருப்' என்றே கம்பெனியும் பதிவுசெய்தது. தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர், ஆதி திராவிடர், நாடார், மறவர், வண்ணார், ஆசாரி, பிள்ளை, இஸ்லாமியர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஈழவர், பணிக்கர், மாப்பிள்ளை கிறிஸ்தவர்கள், நாயர் போன்ற பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் தொழிலாளர்களாக வேலைபார்த்து வந்தனர்

tn
இயற்கை வனப்புமிக்க எஸ்டேட் பகுதியில், 1959ல் “மீண்ட சொர்க்கம்”, 1974ல் “மன்னவன் வந்தானடி”, 1990ல் “நிலா பெண்ணே”, 1991ல் “சார் ஐ லவ் யூ”, 1996ல் “பூமணி”, “சுந்தர புருஷன்”, 2008ல் “பேராண்மை”, 2009ல் “ஆனந்த தாண்டவம்” போன்ற சொற்ப எண்ணிகையிலான திரைப்படங்களே படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளன. எஸ்டேட்டில் திரைப்படம் எடுக்கும்போது, அன்றாட வேலையில் சுணக்கம் ஏற்படுகிறது, அதனால் அங்கு திரைப்படங்கள் எடுப்பதற்கு அவ்வளவு எளிதாகக் கம்பெனி அனுமதி கொடுப்பதில்லை என்று சொல்லப்பட்டது.இருந்தாலும், திரைப்படம் எடுக்கவரும் குழுவினரின் வாயிலாகத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவர்களுக்கான வசதி வாய்ப்பு குறைவு போன்றவை வெளியுலகத்திற்குத் தெரியவரும் என்பதன் காரணமாகவும், திரைப்படங்களின் வாயிலாக எஸ்டேட் பகுதி பிரபலமானால் சுற்றுலா நோக்கில் வெளியாட்கள் அதிகமாக வரத் தொடங்குவர் என்பது போன்ற அச்சத்தின் காரணமாக கம்பெனி அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

சுற்றுலா நோக்கில் எஸ்டேட் செல்ல விரும்பிய நண்பர்களுக்கும், அறிமுகமில்லா வெளியூர் மக்களுக்கும் எஸ்டேட் குறித்து முன்பு நான் கொடுத்துவந்த இந்த விவரணைகளும், அறிமுகமும், இனி எஸ்டேட் அங்கு இல்லாமல் ஆக்கப்பட்டு, காப்புக்காடாக மட்டுமே ஆக்கப்படும் பட்சத்தில், உபயோகமற்ற தகவல்களாக போய்விடும். பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வலைத்தளம் உருவாக்கி, எஸ்டேட் குறித்து இவற்றில் சிலவற்றை பகிர்ந்திருந்தேன். அதைப்பார்த்து பலர் அங்கு செல்ல விருப்பம் கொண்டு அணுகியிருக்கின்றனர். இனி அதற்கான தேவையும் இல்லை.

ஒரே பயிரை தொடர்ந்து பயிரிட்டால் மண் பயனற்றுப்போகும் என்பது அறிவியல். காட்டை நேசிக்கும், ஒரு இயற்கை ஆர்வலனாக பார்க்கும்போது எஸ்டேட் பகுதி காப்புக்காடாக மாறுவதில் உள்ளபடியே மகிழ்ச்சிதான். ஆனால் கடந்தகால அனுபவங்களைக் கொண்டு பார்க்கும்போது, மக்களை வெளியேற்றச் சொல்லும் காரணத்துக்கு நேரெதிரான செயல்பாடுகளே பெரும்பாலும் முன்னெடுக்கப்படுகின்றன. இதுவே மாஞ்சோலையிலும் நிகழும் என்ற பேரச்சமே மேலெழுகிறது.இலாபமில்லை, தொழிலாளர் தட்டுப்பாடு, தேயிலை விலை வீழ்ச்சி என்பது உள்ளிட்ட பல பகுதிகளிலும், எஸ்டேட்டுகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் அந்த எஸ்டேட் பகுதிகள் எல்லாமே பொது குடியிருப்பின் அருகே அமைந்திருந்தன. அதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் எப்போதும் இதர மக்களுடன் தொடர்பில் இருந்துவந்தனர். இதற்கு முற்றிலும் மாறுபட்டு வெளியுலகத்துடன் எவ்வித தொடர்புமின்றி, தனித் தீவுக்குள் இருப்பதுபோல தலைமுறை கடந்து எஸ்டேட்டிற்குள் கூட்டாக வாழ்ந்து வருபவர்கள் மாஞ்சோலை பகுதி மக்கள்.


இந்த பின்னணியில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டால், அந்த நிலத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு, பழக்கப்படாத புதிய பகுதியில், பழக்கமில்லா காலநிலையிலும், அறிமுகமில்லா வேலைகளையும் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தமான சூழலை எதிர்கொள்ள நேரிடுவர்.

தற்போது வெளியில் எங்காவது சந்தித்துக்கொண்டால், அடுத்த நொடியே தங்கள் சுற்றத்தாரை மறந்து, இயல்பு வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, எஸ்டேட் அனுபவங்களைக் குறித்து சிலாகிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். எஸ்டேட் வாழ்க்கை குறித்து அன்றாட வாழ்வில் ஒருமுறையேனும் ஏங்காத எஸ்டேட் வாசியைக் காண்பது அரிது


எஸ்டேட் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான பணிகளை பலரும் முன்னெடுத்து வருகின்றனர். எஸ்டேட் முடிவுக்கு வந்தாலும், வேறு போக்கிடமில்லா அங்குள்ள கூலித்தொழிலாளர்களின் இவ்வளவு கால உழைப்பினை அங்கீகரிக்கும் விதமாக ஒரு நல்ல மாற்று இந்த உலகத் தொழிலாளர் தினம் கொண்டுவரட்டும்.

இனி கொஞ்ச காலத்தில் எம்மக்களை அங்கிருந்து வெளியேற்றி, ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்திட்ட சுவடுகள் மொத்தமும் நிர்மூலமாக்கப்பட்ட பின்னர், பால்யகாலம் முழுவதையும் செலவிட்ட எனது பிறப்பிடமென எதைக்காட்டுவது, எஸ்டேட் மலையின் பெயரையே தனது பெயராகக் கொண்டிருக்கும் எங்கள் மகன் அகஸ்தியாவுக்கு.

பதிவு : இராபர்ட் சந்திரகுமார் (Advocate ,High court Madurai bench)