“சீட் மட்டுமல்ல, இது அதிகாரப் பகிர்வுக்கான நேரம்”- பரபரப்பை கிளப்பிய மாணிக்கம் தாகூர்
தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை, கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. மாணிக்கம் தாகூர், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், யாருக்கு வாக்கு? – IPDS தரவு சொல்லும் தகவல். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே! Time for share of power not only Share of seats. என தெரிவித்து உள்ளார். இது திமுக கூட்டணியில் புகைச்சலை கிளப்பியுள்ளது.
சீட் மட்டுமல்ல, இது அதிகாரப் பகிர்வுக்கான நேரம் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறிய நிலையில், மீண்டும் அதை வலியுறுத்தும் விதமாக இன்னொரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், “நான் காங்கிரஸ் காரன். நேற்று.. இன்று.. நாளை என சங்கிகளை எதிர்த்து பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் என் தலைவர் அவர்களின் தலைமையில் அஞ்சாமல் குரல் கொடுப்பது என் கடமை. காங்கிரஸ் இயக்கத்தின் நிலைப்பாடு குறித்து பேசுவேன். இது எங்கள் இயக்கத்தின் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் கிரிஷ் சோடங்கர் அவர்கள் கூறிய கருத்து. இது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலை." எனக் குறிப்பிட்டுள்ளார்.


