“பாஜக நிதீஷ் குமாரை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்துள்ளது! இபிஎஸ் கண்ணில் பயம் தெரிகிறது”- மாணிக்கம்தாகூர்
விருதுநகரில் செய்தியாளர் பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்,பாஜக நிதீஷ் குமாரை மிரட்டி வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
விருதுநகர் எம்.பி. அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர், “ஒன்றிய மோடி அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. விருதுநகர் ரயில்வே நிலையத்தில் கட்டுமானப்பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. பிரதமர் தமிழகத்திற்கு வரும்பொழுது அதை திறந்து வைப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் பணி முடியாதது மிகவும் வருத்தமளிக்கிறது. பல இடங்களிலே திறப்பு விழாக்கள் நடந்து வருகின்றன. வரும் மார்ச் 11 ஆம் தேதி மீண்டும் பிரதமர் தமிழகத்திற்கு வருவதாக செய்திகள் வந்துள்ளன. அதற்குள், இரயில்வே நிர்வாகம் விருதுநகரில் 2ஆண்டுகளுக்கு முன்னால் துவக்கப்பட்ட ரயில் நிலைய கட்டட பணிகளை முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2023இல் பாஜக ஆட்சியில் சிமோகா மற்றும் பெல்காம் விமான நிலையம் திறப்பு விழாவிற்காகவும் வந்த மோடியின் பயணச் செலவு மட்டும் ரூ.30 கோடி என ஆர்.டி.ஐ தகவல் வெளியாகியுள்ளது. இது மிகவும் கேவலமானது. பிரதமர் மோடி, அரசு பணத்திலே கிராமங்களில் இருக்கின்ற மக்களை அழைத்து வந்து ரோடோரம் நிறுத்தி தனக்கு அலை கடலென மக்கள் வரவேற்பு தருவதைப் போல ஊரெல்லாம் டிராமா நடத்திக் கொண்டிருக்கின்றார். தமிழகத்தில் பாஜக தலைமையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த முயற்சி தோல்வி பெற வேண்டும். ஏனென்றால், வட மாநிலங்களில் நடந்ததைப் போல தமிழகத்திலும் இந்த நிலை வரக்கூடாது. தற்போது நிதீஷ் குமாரை வலுக்கட்டாயமாக மாநிலங்களவைக்கு அனுப்பி இருக்கிறார்கள். காலையில் தம்பிதுரை நாமினேஷன் கொடுக்கும் போது எடப்பாடி பழனிசாமிக்கும் அந்த பயம் கண்ணிலே தெரிந்தது. மோடியும் அமித்ஷாவும் கூட்டணி கட்சிக்காரர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதும் மிகத் தெளிவாக தெரிகிறது. ஒரு முதலமைச்சரையே வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தி மேலவைக்கு அனுப்புகின்ற இந்த செயலால், பீகாரை தங்களுடைய கட்டுப்பாட்டில் பாஜக கொண்டு வந்திருக்கிறது. கொல்லைப்புறமாக எப்படி பாஜக ஒரு மாநிலத்தை கைப்பற்றும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி, தினகரன், அன்புமணி ஆகியோர் வரலாற்று பிழையை செய்கின்றனர். இது தமிழக மக்களுக்கு செய்கின்ற துரோகம். எடப்பாடியின் பதவி ஆசைக்காகவும் மற்றவர்களை சிபிஐ, ஈடி பயன்படுத்தி மிரட்டுவதாலும் அடிபணிந்திருக்கின்றனர். எனவே, இந்த கூட்டணி வெற்றி பெறக்கூடாது” என்றார்.

