கப்பலூர் சுங்கச்சாவடியில் ரூ.10 கோடிக்கு மேல் ஊழல்- மாணிக்கம் தாகூர் எம்பி

 
manickam tagore

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் ரூபாய் 10 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது, இது குறித்து இத்தொகுதியின் அதிமுக எம்எல்ஏ உதயகுமாரிடம் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி , பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதற்கு தயாரா? என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணிக்கம் தாகூர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள ஒன்றிய அரசின் சுங்கச்சாவடி கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில், தற்போது சிஏஜி அறிக்கையில் வெளிவந்த,  ரூபாய் 10 கோடி ஊழல் செய்திருப்பதாக கப்பலூர் சுங்கச்சாவடி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் , இது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடக்கோரி , இத்தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாகவும் , அமைச்சராகவும் இருந்த ஆர்.பி. உதயகுமார் , பிரதமர் மோடிக்கு சிபிஐ விசாரணை நடத்தக் கூறி கடிதம் எழுதுவதற்கு தயாரா? என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக , திருமங்கலம் தொகுதியில் உள்ள உச்சப்பட்டி, மறவன்குளம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டப் பணிகளை ஆய்வு செய்த எம்பி மாணிக்கம் தாகூர், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் மாதம் தோறும் 1 கோடியே 60 லட்சம் பெண்களுக்கு  ஆயிரம் ரூபாய் வழங்குவது, இதுவரை இந்தியாவில் எங்குமே நடக்காத திட்டம் என்றும், அனைவரும் பாராட்டும் விதத்திலும் தமிழக முதல்வர் செய்து வருவதை கிராம மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறினார். மேலும் 100 நாள் வேலைத்திட்ட பணிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு,  கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்காததற்கு மோடி அரசே காரணம் எனவும், இதற்கான தொகையை அனுப்பாமல் காலதாமதம் செய்வதாகவும் , 100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் எண்ணத்தில் மோடி உள்ளார் எனவும் எம்பி மாணிக்கம் தாகூர் பேசினார்.