சிறுமி பாலியல் வன்கொடுமை- குற்றவாளி குறித்த தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் சன்மானம்
கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி குறித்த விவரங்களை வழங்கினால் வெகுமதி வழங்கப்படும் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி, முன்கூட்டியே பள்ளி முடிந்ததால், அருகில் ஆரம்பாக்கத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்வண்டி நிலையத்தைக் கடந்து ஆள்நடமாட்டம் இல்லாத மாந்தோப்பு வழியாக சென்ற போது பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் சிறுமியை கத்தி முனையில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமியின் உடல் முழுவதும் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்த நிலையில், 10 நாட்களாகியும் இன்று வரை, குற்றவாளி கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி குறித்த விவரங்களை வழங்கினால் வெகுமதி வழங்கப்படும் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. குற்றவாளியை அடையாளம் காணவும், துப்பு துவக்கவும் பயனுள்ள நம்பகமான தகவல்களை வழங்குவோருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும்,9952060948 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவல் அளிக்கலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

