வெறிநாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை

 
s

கோவை அரசு மருத்துவமனைக்கு நாய் கடி சிகிச்சைக்கு வந்த வட மாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (35). இவர் கோவையில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்று அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியாக  கோவை அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு நோயின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அரசு மருத்துவமனையில்  உள்ள வெறிநாய் கடி தனி பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். அப்போது  மதியம் 2.30 மணியளவில் திடீரென ராம்சந்தர் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு திடிரென சத்தம் போட்டவாறு அறைக்கும் அங்கும், இங்கும் நடந்துள்ளார். 

பின்னர் அங்குள்ள நோட்டீஸ் போர்டு கண்ணாடியை உடைத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வெறிநாய் கடிக்கு சிகிச்சைக்கு வந்த  வட மாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த மருத்துவமனை முதல்வர் நிர்மலா, “மருத்துவமனைக்கு வந்தது முதலே மூர்க்கத்தனமாக அவர் நடந்து கொண்டார். செயல்பாடுகளை பார்த்த போது ரேபிஸ் அறிகுறி இருந்தது. மேலும் அவரை  கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை. இதனால் தனியாக அடைத்திருந்தோம். திடிரென கண்ணாடியை உடைத்து மூர்கதனமாக நடந்து கொண்டார்.  அவரை மயக்க நிலை அடைய வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டது. கையில் கண்ணாடியுடன் இருந்ததால் மருத்துவர்கள் நெருங்க முடியாத சூழல் ஏற்பட்டது. பிறகு தீயணைப்பு துறையினர் தகவல் அறிந்து வந்து அவரை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. ரேபிஸ் அறிகுறியை இரத்த பரிசோதனையில் அறிய முடியாது. நாளை அல்லது நாளை மறுநாள் உடல் கூறு ஆய்வு செய்ய உள்ளோம்” என்றார்.