மாமனாரை சுட்டுக் கொன்றுவிட்டு மருமகன் தற்கொலை.. காங்கேயத்தில் பரபரப்பு..
திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே மாமனாரை சுட்டுக் கொன்று விட்டு, மருமகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கொடுவாய் எல்லப்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. அவருக்கு வயது 70. இவருடைய மகள் அம்பிகாவின் கணவர் படியூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்கிற ராஜ்குமார்(50). இவர் படியூரில் ஹாலோபிளாக் கல் உற்பத்தி செய்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமாருக்கும், மாமனார் பழனிசாமிக்கும் கடந்த சில ஆண்டுகளாக சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை சுமார் 8 மணி அளவில் பழனிசாமி தனது வீட்டு அருகே மாடுகளை மேய்ப்பதற்காக பிடித்துச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ராஜ்குமார் மாமனாரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.
அவர் 5 முறை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் நெஞ்சில் குண்டு பாய்ந்து பழனிசாமி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் மாமனார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்ட மருமகன், பதற்றத்திலும் காவல்துறையினர் கைது செய்வார்களோ என்கிற அச்சத்திலும் படியூர் சென்று அங்குள்ள தனது அறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காங்கேயம் பகுதியில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.