புலி நகம், மான் கொம்பு! இன்ஸ்டாகிராம் பிரபலம் எடுத்த வீடியோவால் சிக்கிய நபர் - வனத்துறையினர் அதிரடி

 
s

கோவையில் புலி நகம் சங்கிலி அணிந்திருந்த தொழிலதிபரை கைது செய்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அண்மையில் "கோயமுத்தூர் மாப்பிள்ளை" என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு பேட்டியளித்தார். அதில் தான் புலி நகம் சங்கிலி அணிந்திருப்பதாகவும், அதனை ஆந்திராவில் சென்று வாங்கி வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதையடுத்து மதுக்கரை சரக வனத்துறையில் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் வீடியோவில் பேட்டியளித்தவர் கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பதும், தொழிலதிபர் என்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து வனத்துறையினர் அவரது வீட்டிற்குச் சென்ற சோதனையிட்டனர். அப்போது வீட்டில் இருந்து புள்ளி மானின் கொம்புகளை வனத்துறையினர் கண்டறிந்தனர். அதனை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் வீட்டில் இல்லாத நிலையில், மீண்டும் இன்று வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அப்போது புலி நகம் இருந்த சங்கிலியையும் வனத்துறையினர் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட புலி நகம், மான் கொம்பை ஆய்வுக்காக அனுப்பி வைக்க உள்ளனர்.