கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபர் கைது

கோபி அருகே உள்ள உக்கரம் எம்.ஜி.ஆர் நகரில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த செல்வம் என்பவரை கடத்தூர் போலீசார் கைது செய்தனர்.
கோபி அருகே உள்ள உக்கரம் மில்மேடு எம்.ஜி.ஆர்.நகரில் இருந்து திருப்பூர் மாவட்டதிற்கு கள்ளச்சாராயம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கடத்தூர் இன்ஸ்பெக்டர் துரைபாண்டி தலைமையிலான போலீசார் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள செல்வம் என்பவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். போலீசார் நடத்திய சோதனையில் செல்வத்தின் வீட்டில் விற்பனைக்கு தயாராக 10 லிட்டர் கள்ளச்சாராயம் இருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து செல்வத்தை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வம் வீட்டிலேயே குக்கர் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரிய வந்தது. மேலும் செல்வம் வீட்டின் முன்பு சாராய ஊறல் போட்டு இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட செல்வத்தின் வீட்டின் முன்பு 6 அடி ஆழத்தில் மண்ணில் புதைத்து வைத்து இருந்த 25 லிட்டர் பிளாஸ்டிக் கேனில் இருந்த சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து அழித்ததோடு, செல்வத்திடம் இருந்த 10 லிட்டர் கள்ளச் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட செல்வத்திடம் நடத்திய விசாரணையில், கள்ளச்சாராயத்தை திருப்பூர் மாவட்டத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு உதவியாக இருந்த செல்வத்தின் மனைவி அய்யம்மாளை போலீசார் தேடி வருகின்றனர்.