1,500 போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த நெல்லை வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது!

 
Bomb

2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்கள், அரசியல்வாதிகளின் வீடுகள், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 1,500க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டன.

மிரட்டல் வந்த உடனே விமானங்கள், விமான நிலையங்கள், கல்வி நிலையங்களில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

இருப்பினும், ஒவ்வொரு எச்சரிக்கையும் ஒரு போலி மிரட்டலாகவே முடிந்தது. இது தொடர்பாக அமெரிக்காவில் பணியாற்றி வந்த ஐ.டி. பொறியாளர் சரத் சுப்பிரமணியன் சென்னை விமான நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் சைபர் க்ரைம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் மூலம் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி தனது அடையாளத்தை மறைக்க VPN மற்றும் டார்க் வெப் (Dark Web) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளார்.

இருப்பினும், ஒரு மிரட்டல் மின்னஞ்சலுக்குத் தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் இருந்து தவறுதலாகப் பதிலளித்ததால் போலீசாரிடம் மாட்டிக்கொண்டார். கடந்த 6 மாதங்களாகக் கண்காணிக்கப்பட்டு வந்த இவருக்கு எதிராக 'லுக்-அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது அவர் கைது செய்யப்பட்டார்.இந்தச் சம்பவத்தில் இவருக்குப் பின்னால் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து சென்னை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். சரத் சுப்ரமணியன் சங்கர் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர். அவர் டெக்சாஸின் ஆஸ்டினில் வசித்து வந்தார். அங்கு அவர் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

இந்த நபர் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு 33 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். போலி மின்னஞ்சல்கள் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக நடத்திய விசாரணையில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அந்த நபரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்