ரோகித் சர்மா, நடிகர் மம்முட்டிக்கு மத்திய அரசின் உயரிய பத்ம விருதுகள்!
குடியரசு தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் உயரிய குடிமை விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, வர்த்தகம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனித்துவமான மற்றும் சிறப்பான சாதனைகள் அல்லது சேவைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய 3 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் பொதுச்சேவை உள்ளிட்ட முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்கச் சாதனை புரிந்தவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர். நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெற்றவர்களின் விவரத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இதில், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் தமிழ்நாட்டில் இருந்து 12 பேருக்கும், புதுச்சேரியில் ஒருவருக்கு என மொத்தம் 13 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த காயத்ரி பாலசுப்ரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியன் (கலை), ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் (கலை), ஆர்.கிருஷ்ணன் (கலை), எச்.வி. ஹண்டே (மருத்துவம்), புண்ணியமூர்த்தி நடேசன் (மருத்துவம்), கே. ராமசாமி (அறிவியல் மற்றும் பொறியியல்), கே. விஜய்குமார் (சிவில் சர்வீஸ்), ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் (கலை), சிவசங்கரி (இலக்கியம் மற்றும் கல்வி), திருவாரூர் பக்தவத்சலம் (கலை), வீழிநாதன் காமகோடி (அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சிலம்ப கலைஞர் பழனிவேல் (விளையாட்டு) ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சார்ந்த 13 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டை சேர்ந்த கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமிக்கு மருத்துவத்துக்கான விருதும், எஸ்.கே.எம். மயிலானந்தனுக்கு சமூக சேவைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா நடிகர் மம்முட்டிக்கு கலைக்கான பத்ம பூஷன் மற்றும் நடிகர் மாதவனுக்கு (மகாராஷ்டிரா) பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


