திரிணாமூல் தலைவர் பதவியில் இருந்து மம்தா நீக்கம்..?

 
mamta banerjee

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மம்தா பானர்ஜியை நீக்குவதாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழு அறிவிப்பு... கட்சியின் தலைவராக அருப் ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரித்தபிரதா பானர்ஜி தலைமையிலான அணியினர் தகவல்...

மேற்குவங்கத்தில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை பிடித்து, முதலமைச்சராக இருந்துவந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, 2026 சட்டமன்றத் தேர்தலில் 80 இடங்களில் மட்டுமே வென்று தோல்வியைச் சந்தித்தார். பாஜக 207 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்து சுவேந்து அதிகாரி முதலமைச்சரானார்.

இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் சரிவை சந்தித்து வருகிறது என்றே சொல்லும் அளவிற்கான நிகழ்வுகள் அக்கட்சியில் தொடர்து அரங்கேறி வருகிறது. முதலில் சட்டமன்றத்தில் 80 உறுப்பினர்களைக் கொண்ட திரிணாமுல் காங்கிரசில் இருந்து 60 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அணியாக உருவாகி, தாங்கள் ஏற்றுக்கொண்ட தலைமையான ரிதப்ரதா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தனர். அதனை ஏற்ற சபாநாயகர் ரிதப்ரதா பானர்ஜியை அறிவித்தார்.

 

தேர்தலில் தோல்வி அடைந்து சட்டமன்றத்திற்குள்ளே நுழைய முடியாத திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு பெரும் சரிவாக அமைந்தது இந்த நிகழ்வு. இந்த அதிர்ச்சியில் இருந்து மம்தா எழுவதற்குள் தனது கட்சியைச் சேர்ந்த 28 எம்.பி.க்களில் 20 எம்.பி.க்கள் அவருக்கு எதிராக திரும்பி, 60 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர்.

 

இந்நிலையில், கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை நீக்குவதாகவும், அவருக்கு பதிலாக அரூப் ராயை திரிணாமுல் காங்கிரஸ் தலைவராக நியமித்திருப்பதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ. குழு அறிவித்துள்ளது. மேலும், புதிய தலைவர் நியமனம் குறித்தான கடிதத்தை விரைவில் தேர்தல் ஆணையத்திடம் அதிருப்தி குழு வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.