ஆளுநர்களின் செயல்பாடு குறித்து ஸ்டாலினுடன் ஆலோசனையா?- மம்தா விளக்கம்

 
mamata banerjee

மேற்கு வங்க பொறுப்பு ஆளுநராக உள்ள இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிறப்பு விமானம் மூலமாக சென்னை வந்துள்ளார். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சித்ரஞ்சன் சாலையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேசினார்.

இருவருமே இரு வேறு மாநில முதலமைச்சர்களாக இருந்தாலும் தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். இந்தநிலையில் இவ்விருவரின் சந்திப்பும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேசிய அளவில் வலுவாக உள்ள பாஜகவின் இந்தி திணிப்பு முதல் பல்வேறு விஷயங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார். அதேபோல, எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மூன்றாவது அணியை கட்டமைக்கும் முயற்சியில் முதன்மையானவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி தீவிரம் காட்டி வருகிறார். ஒருபுறம் காங்கிரஸ் கட்சியின் பலத்தை கூட்டும் வகையில் இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி நடத்தி வருகிறார். மறுபுறம் நிதிஷ் குமார், சந்திரசேகர் ராவ் என ஆளுக்கொரு அணியை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். 

2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை திமுக தொடங்கியுள்ள நிலையில் சூழலில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி சந்திப்பு தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "மேற்குவங்க பொறுப்பு ஆளுநராக இருக்கும் இல.கணேசன் அவருடைய இல்ல விழாவிற்கு அழைத்ததன் பேரில் சென்னை வந்துள்ளேன். இங்கு சகோதர சகோதரி என்ற பாசத்தோடு மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளேன். அரசியலில் மேம்பாடு குறித்து தனிப்பட்ட முறையில் ஆலோசிக்கவில்லை.எந்தவிதமான அரசியல் குறித்தோ, இரண்டு மாநிலங்களின் ஆளுநர்களின் செயல்பாடு குறித்த ஆலோசிக்கவில்லை" எனக் கூறினார்.