அதிமுக ஆட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் முறைகேடு - 24 பேர் மீது வழக்குப்பதிவு!

திருவண்ணாமலையில் அதிமுக ஆட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டியதில் முறைகேடு தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 3 பேர் உட்பட 24 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் நிலையை கருத்தில் கொண்டு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டி தருகிறது. குறிப்பாக இத்திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வது முதல் வீடு கட்டி முடிக்கும் வரை அனைத்து பணிகளையும் ஊரக வளர்ச்சித் துறையினர் கண்காணித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலை வந்தவாசி தெள்ளார் ஆரணி ஆகிய ஒன்றியங்களில் பட்டியலின மக்களும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களும் அதிகம் உள்ள நிலையில் இந்த 4 ஒன்றியங்களில் அதிக அளவு வீடு கட்டும் திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை பயனாளிகளாக சேர்க்காமல் வசதி படைத்தவர்களை பயனாளிகளாக சேர்த்துள்ளதாகவும் மேலும் திட்டத்தில் பல்வேறு இந்த முறைகேடுகளும் ஊழல்களும் நடைபெற்றுள்ளதாக முன்னாள் ஆரணி காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத் குற்றம் சாட்டி மாவட்ட நிர்வாகத்திடம் அப்போதே புகார் மனு அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் அப்போதைய ஆட்சியர் கந்தசாமி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் எம்பி விஷ்ணுபிரசாத் முறையான விசாரணை நடைபெறவில்லை எனக் கூறி திருவண்ணாமலை மாவட்ட லோக் ஆயுக்தாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு புகாரை அளித்தார். முதற்கட்ட விசாரணை நடந்து முடிந்த நிலையில் விசாரணையில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான ஆவணங்களையும் ஆதாரங்களையும் முறையாக திரட்டி வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு மாவட்ட லோக் ஆயுக்தா பரிந்துரை செய்தது..
அதன் பேரில் அதிமுக ஆட்சிக்காலத்தில் 2017-18 ஆம் ஆண்டில் 4 ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணிபுரிந்த 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட 24 பேர் மீது மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து உள்ளார். வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி, தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன், ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், வந்தவாசி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வில்வபதி உள்ளிட்ட 24 அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு அலுவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து 2017-18 ஆம் ஆண்டில் வீடு கட்டி உள்ள பயனாளிகளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் மேலும் பல்வேறு அதிகாரிகள் சிக்குவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகிறது.