"ஜனநாயகன் சென்சார் பிரச்சனை விஜய்க்கு மேலும் வலிமையை தான் கொடுக்கும்" - மல்லை சத்யா
மதிமுக கட்சியில் துணை பொது செயலாளர் ஆக இருந்த மல்லை சத்தியா கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து வெளியேறி திராவிட வெற்றிக் கழகம் என்ற கட்சியை புதியதாக தொடங்கி அதில் தலைவராக செயல்பட்டு வருகிறார். கட்சி தொடங்கி முதல் மாவட்ட செயல்வீரர் கூட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ரங்கசாமி குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் திராவிட வெற்றி கழகம் தலைவர் மல்லை சத்யா கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் கலந்துரையாடி கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மல்லை சத்யா பேசுகையில், “ஜனநாயக திரைப்படத்தை வெளியிடாமல் காலம் தாழ்ந்து வரும் மத்திய அரசு இது ஒரு ஜனநாயகம் விரோத போக்கு. நடிகர் விஜய் என்பதை தவிர்த்து இதில் பணியாற்றிய பணியாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர், நீதிமன்றத்தை காரணம் காட்டி படத்தை தள்ளிப் போட ஏற்றுக் கொள்ள முடியாது, முழுக்க முழுக்க மத்திய அரசுதான் காரணம். இது ஒரு திரைப்படம் மட்டுமல்லாமல் அது பின்னாடி நடக்கும் அரசியல் சம்பந்தப்பட்டவருக்கு பின்னோக்கி நகரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தணிக்கை குழு தன்னாட்சி அதிகாரிகள் இருந்தாலும் கூட அவர்கள் அனைவரும் பாஜக அரசால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் உள்ளனர். ஆகையால்தான் பாஜக என்ன நினைக்கிறதோ அதைத்தான் தணிக்கை குழு நிறைவேற்றுகிறது, அதனால்தான் பராசக்தி படத்தில் இந்தி எதிர்ப்பு என்பதே இருக்கக் கூடாது என கூறுகிறது. ஆகையால் தான் ஜனநாயகம் திரைப்படம் ரத்து செய்யப்படுவதற்கு பாஜக செயல்படுவதாக நாட்டு மக்கள்கள் அறிகிறார்கள், இந்த நடவடிக்கை விஜய்க்கு மேலும் வலிமையை தான் கொடுக்கும்.
இந்தி திணிப்பு என்பது பாஜகவாக இருந்தாலும், காங்கிரஸ் சார்பாக இருந்தாலும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். பராசக்தி படத்தில் கடந்த காலத்தை பற்றி பேசும் பொழுது காங்கிரஸ் பற்றி தான் பேசுகிறது என்று நினைக்காமல் கடந்த காலத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தவறானது என புரிந்துகொண்டு நிகழ்காலத்தில் இதுபோன்று எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.


