“துரை வைகோவிற்கு திமுக கூட்டணியில் அங்கம் வைக்க விருப்பமில்லை”- மல்லை சத்யா பரபரப்பு பேட்டி

 
மல்லை சத்யா மல்லை சத்யா

மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய மல்லை சத்யா, “வரும் நவம்பர் 20 ஆம் தேதி புதிய கட்சியை துவங்க உள்ளேன். இந்த கட்சியில் இணைபவர்கள் அனைவருமே மதிமுகவிலிருந்து வந்தவர்கள் தான். வைகோ எந்த பிரிட்டானிய பாராளுமன்றத்தில் உரையாற்றினாரோ அதே பாராளுமன்றத்தில் இந்த ஆண்டு நான் உரையாற்றினேன். அதேபோல ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தில் ஈழத் தமிழர் பிரச்சினைக்காக வைகோ பேசியது போலவே நானும் அதே ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசினேன். 28 ஆண்டுகள் சரியான வழியில் சென்று கொண்டிருந்த மறுமலர்ச்சி திமுக தற்போது மகன் திமுகவாக மாறிவிட்டது. இயக்க தலைவர் இயக்கத் தலைவராக இல்லாமல் குடும்பத் தலைவராக சுருங்கி விட்டார். வைகோவின் மகன் துரை வைகோவிற்கு திமுக கூட்டணியில் அங்கம் வைக்க விருப்பமில்லை. அவர் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு ஒன்றிய அமைச்சர் பதவியை பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு வலதுசாரி சிந்தனையாளராக கார்ப்பரேட் சிந்தனையாளராக இருக்கிறார்.

நாங்கள் அனைவரும் ஈரோடு காஞ்சி கலிங்கப்பட்டியில் உருவாக்கப்பட்டவர்கள். அந்த இயக்கத்தில் பூனா உடைய ப்ராடக்ட் வந்து விடக்கூடாது. அந்த சிந்தனையில் இருக்கின்றவர்கள் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும். பெரியாரும் பெருமாளும் ஒன்று எனக் கூறுபவர்கள் திராவிட இயக்கத்தின் சிந்தனையாளர்களாக இருக்க முடியாது. ஆன்மீகம் என்பது வேறு அரசியல் என்பது வேறு என்பதை புரிந்து கொண்டால் தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது. புதிய கட்சி தொடங்கும் எங்களை வைகோ வாழ்த்துவார். போராட்டக்காரராக கடந்த 32 ஆண்டுகளில் என்னைப் பார்த்தவர். நான் ஒரு போராட்டக்காரர் என்பது அவருக்கு தெரியும். அவர் எதை எதையெல்லாம் முடிக்க வேண்டும் என்று நினைத்தாரோ அதை நாங்கள் போராடி முடித்துக் காட்டினோம்.ஆகவே மகனைக் கடந்து மானசீகமாக என்னை வாழ்த்துவார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.