"நான் துரோகியா?”- உண்ணாவிரத போராட்டம் அறிவித்த மல்லை சத்யா
ஆகஸ்ட் 2ம் தேதி மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார்.

மதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கட்சியை விட்டு வெளியேறாவிட்டாலும் அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது. துரை வைகோவை பின்பற்றி அவர் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதனால், மல்லை சத்யா மற்றும் துரை வைகோ இடையே பனிப்போராக இருந்த இந்த விவகாரம் கடந்த ஏப்ரல் மாதம் வெளிப்படையாக வெடித்தது. இதைத் தொடர்ந்து, வைகோவின் முயற்சியால் இருவரும் சமாதானப்படுத்தப்பட்டனர். இதனால், இருவருக்கும் இடையே இருந்த வந்த மோதல் போக்கு ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது என அனைவரும் நினைத்த நிலையில், மல்லை சத்யா மீது வைகோ அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துவருகிறார். மேலும் மல்லை சத்யாவை துரோகி எனக் கூறி கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் 32 ஆண்டுகால பொது வாழ்க்கையைகேள்வி குறியாக்கும் வகையில் `துரோகி' என சொல்லி சிறுமைப்படுத்தியதாக குற்றஞ்சாட்டி ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரத போராட்டம் இருக்கவிருப்பதாக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அறிவித்துள்ளார். நாட்டு மக்களிடம் நீதி கேட்டு அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையில் மல்லை சத்யா மனு அளித்துள்ளார்.


