"உரிமைத்தொகையில் மகளிரை ஏமாற்றிய திமுக பட்ஜெட்" - கமல் ஹாசன் சாடல் !

 
kamal

தமிழக அரசின் பட்ஜெட்டில் பெண்களுக்கான உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு இல்லாதது குறித்து கமல் ஹாசன் கடுமையாக சாடியுள்ளார்.

tn

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட்டது . இருப்பினும் பெண்களுக்கான உரிமை தொகை திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பெண்களுக்கான உரிமை தொகை தொகை திட்டம் குறித்த அறிவிப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது குறித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மகளிருக்கான உரிமைத் தொகை வழங்க தேவையான நடவடிக்கைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.  கடந்த ஆட்சியை விட இந்த அரசு கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது . நிதி நிலைமை சற்று முன்னேற்றம் காணும்போது உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், "சட்டமன்றத் தேர்தலின்போதும், உள்ளாட்சித் தேர்தலின்போதும் மகளிர் உரிமைத் தொகையை வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம் என்று முழங்கியது திமுக. கடந்த பட்ஜெட்டில், உரிமைத் தொகையைப் பெறுவதற்கு உரிய பயனாளிகளைக் கண்டுபிடித்து வழங்குவோம் என்று அடக்கி வாசித்தது. இன்றைய பட்ஜெட் உரையில், "நிதி நிலைமை மேம்பட்டதும் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்படும்" என்று மழுப்பலாகப் பேசி வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு அப்பட்டமாக மகளிரை ஏமாற்றியுள்ளது திமுக. மகளிர் உரிமைத் தொகையை முதலில் முன்வைத்த மநீமவின் வாக்குறுதியைக் காப்பியடிக்கக் காட்டிய வேகத்தில் சிறிதளவாவது அதனைச் செயல்படுத்துவதில் காட்டியிருந்தால் மகளிர் உரிமைத் தொகை இன்று சாத்தியமாகியிருக்கும்.வாக்குகளை வாங்குவதற்காகக் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்படும் என்று நம்பி ஏமாற வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது திமுக. திமுக மாறவில்லை.. மக்கள்தான் மாறவேண்டும் " என்று குறிப்பிட்டுள்ளது.