மேஜர் ஜெயந்தின் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு

 
jayant

அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு செலுத்தப்பட்டது.

அருணாச்சலப் பிரதேசம் மாநிலம் சங்கே கிராமத்தில் இருந்து நேற்று முன் தினம் ராணுவ ஹெலிக்காப்டரில்  லெப்டினன்ட் மற்றும் மேஜர் ஆகியோர், அசாம் மாநிலம் சோனிப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளனர்.  ஆனால் புறப்பட்ட 15 நிமிடங்களில்  விமானிகள் உடனான தகவல் இணைப்பு தொடர்பை இழந்துள்ளது.  இதனையடுத்து  போம்டிலாவின் மேற்கே மண்டலா ஹில்ஸ் பகுதிக்கு அருகே ஹெலிக்காப்டர் விபத்துக்குள்ளானது தெரியவந்தது.  ஹெலிகாப்டர்  விழுந்து நொறுங்கிய  அதே பகுதியில் 2 பைலட்டுகளின் உடலும் கண்டறியப்பட்டது. பனிமூட்டம் காரணமாக மலைமீது மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விபத்தில் இறந்த விமானிகள் லெப்டினன்ட் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் என்பது  அடையாளம் காணப்பட்டது. இதில் மேஜர் ஜெயந்த் தமிழ்நாட்டில் உள்ள தேடி மாவட்டத்தைச்  சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.  

Army Man Body

ஜெயந்த் தேனி மாவட்டத்தில் உள்ள ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சாரதா என்ற மனைவி உள்ளார். ஜெயந்தின் மறைவால் அவரது கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. இதனிடையே உயிரிழந்த லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டியின் உடல் ஐதராபாத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மேஜர் ஜெயந்த்தின் உடல் விமானப்படை விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் கலெக்டர் அனீஷ் சேகர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மேஜர் ஜெயந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று காலை மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்திற்கு மேஜர் ஜெயந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. 

அங்கு அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடலின் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியை, இந்திய ராணுவத்தினர் முறைப்படி அகற்றி, மேஜர் ஜெயந்தின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் மேஜர் ஜெயந்தின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.