எங்கும் ஓடி ஒளியவில்லை; விசாரணைக்கு ஒத்துழைப்பேன்- மகாவிஷ்ணு
பள்ளியில் சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மகாவிஷ்ணு வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் எங்கும் ஓடி, ஒளியவில்லை. ஓடி ஒளியும் அளவுக்கு எந்த தவறான கருத்தையும் கூறவில்லை. தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. எனது ஆஸ்திரேலிய பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. 8 நாட்களுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியா வந்துவிட்டேன். என்னை பற்றிய புகாருக்கு விளக்கம் தருவதற்காகவே நான் நாளை சென்னை வருகிறேன். நாளை மதியம் 1 மணிக்கு சென்னைக்கு வர உள்ளேன். சென்னை வந்ததும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து எனது தரப்பு விஷயங்களை எடுத்து சொல்வேன். தமிழ்நாடு காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர். ஆனால் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும், இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.