மதுரை TO பெரம்பலூர்.. ஆம்புலன்ஸில் தடையின்றி 114 நிமிடங்களில் பெரம்பலூர் வந்த இதயம்..!
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மூளைச்சாவு அடைந்தார். அவரது இதயம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
இந்நிலையில், சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருதயவியல் துறையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரியை சேர்ந்த 43 வயது பயனாளிக்கு தானமாக பெறப்பட்ட இதயத்தை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக மதுரையிலிருந்து சுமார் 178 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இதயம் கொண்டுவரப்பட்டது. காலை 10:28 மணிக்கு மதுரையிலிருந்து ஆம்புலன்ஸில் புறப்பட்ட இதயம் வெறும் 1 மணி நேரம் 54 நிமிடங்களில் மதியம் 12.22 மணிக்கு மருத்துவமனை வந்தடைந்தது.
மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி அவசரகால உறுப்பு மாற்று பயணம் தடையின்றி நடைபெற மதுரை, திருச்சி, பெரம்பலூர் வழித்தடத்தில் திருச்சி காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்து பசுமை வழித்தடத்தை ஏற்படுத்தினர்.
இதன் மூலம் குறித்த நேரத்தில் இதயம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. மேலும், இருதய மற்றும் மார்பு ரத்த நாள அறுவை சிகிச்சை துணைத் தலைவர் டாக்டர் ஆஷிக் நிகமத்துல்லாஹ் தலைமையில் பயனாளிக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த மனிதநேய பணிக்காக இதயத்தை தானமாக வழங்கிய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும், இந்த உயிர்காக்கும் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கும் பயனாளியின் குடும்பத்தினர் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
மேலும், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பிலும், இதயத்தை பெற்ற பயனாளியின் குடும்பத்தினர் சார்பிலும், உயிரை காக்கும் இந்த அவசரகால பயணம் தடை இன்றி நடைபெற முழுமையான ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் வழங்கிய திருச்சி மண்டல காவல்துறையின் அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவைக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
மதுரை TO பெரம்பலூர்.. ஆம்புலன்ஸில் தடையின்றி கொண்டு செல்லப்பட்ட இதயம்!!
— Polimer News (@polimernews) September 2, 2026
வாட்ஸ் ஆப் குழுவில் தகவல் தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், தடையில்லா போக்குவரத்திற்கு உதவி செய்த மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆம்புலன்ஸ் குழுவினர்..!#Ambulance | #Madurai | #Trichy |… pic.twitter.com/iFs40KuJKZ

