மதுரை: சாலையோர பள்ளத்தை மூடிய மழைநீர்.. குழந்தைகளுடன் அடுத்தடுத்து தவறி விழுந்த 3 பெண்கள்..
மதுரை மாநகராட்சியில் மழையினால் ஏற்பட்ட சாலை பள்ளத்தில் குழந்தைகளுடன் இரண்டு பெண்கள் அடுத்தடுத்து விழும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
மதுரையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கின்றன. அத்துடன் மதுரை மாநகராட்சியில் சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதாலும், சாலை ஓரங்களில் பள்ளங்கள் இருப்பதாலும் அங்கு மழைநீர் தேங்கியுள்ளன. அந்த பள்ளங்களை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வந்தாலும், அவ்வப்போது இந்த சாலைகளில் உடனடியாக தண்ணீர் தேங்கி பள்ளங்களை மூடி விடுகின்றன. இது இந்தப்பகுதியில் செல்லும் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் கடும் சிரமங்களை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலையோர பள்ளத்தில் பெண்கள் குழந்தைகளுடன் தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது. பெரியார் பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய கடைக்கு முன்பாக சாலையோர மழை தண்ணீர் தேங்கி இருக்கிறது. அவ்வழியே மூன்று பெண்கள் குழந்தைகளுடன் சாலையை கடந்து வந்துள்ளனர். அதில் பெண் ஒருவர் குழந்தையுடன் பல்லத்தில் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற முயற்சிகள் ஈடுபட்ட மற்றும் இரு பெண்களும் அடுத்தடுத்து குழந்தைகளுடன் தவறி பள்ளத்தில் விழுந்தனர். உடனடியாக அருகில் இருந்து கடைக்காரர்கள் பெண்களையும் , குழந்தைகளையும் தூக்கி மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன . பின்னர் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சாலையை சப்பனிடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் குறிப்பாக தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பொதுமக்கள் கவனமுடன் செல்ல வேண்டும் எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாநகராட்சி சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையை கடந்த 3 பெண்கள் தவறி விழுந்த காட்சி#Madurai #DrainageIssue pic.twitter.com/1mpYFz6ccK
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) August 21, 2024