மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா ரத்து...- பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு..

 
மோடி - அண்ணாமலை


மதுரையில் ஜனவரி 12  ஆம்  தேதி பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா ரத்து செய்யப்படுவதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொங்கல் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் ஜன.12 ஆம் தேதி மதுரை மண்டேல நகரில்  நடைபெற இருந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்காக மாநில அளவிலான  வரவேற்புக் குழுவையும்  நியமிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

மோடி பொங்கல் விழா

விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக்  கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா ஜன. 12 அன்று நடைபெறவுள்ளது.  இந்தக்  கல்லூரிகளைத் திறந்து வைக்க பிரதமர் மோடி , தனி விமானம் மூலம்  தமிழகம் வர இருக்கிறார்.   மேலும், விருதுநகரில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொள்ள இருக்கிறார் என்று கூறப்பட்டது.

அண்ணாமலை

இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கல்லூரிகளை திறந்து வைத்த  பின்னர் பாஜக  சார்பில் ஏற்பாடு செய்யப்படும் பொங்கல் விழாவில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா  ஒத்திவைக்கப்பவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.

இந்நிலையில் மருத்துவக் கல்லூரி திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.  அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்பது குறித்து அரசுதான் விளக்கமளிக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.