மதுரையில் பரபரப்பு: நடுவழியில் பழுதாகி நின்ற 'நீட்' வினாத்தாள் வாகனம்!
Jun 17, 2026, 10:16 IST1781671594255
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு (NEET-UG) ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. அதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வானது மே 3ஆம் தேதி நடைபெற்றது. தேர்வுக்கு முன்னரே ராஜஸ்தான் உள்ளிட்ட சில பகுதிகளில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக தேர்வு நடந்த முடிந்த பின்னர் தெரியவந்த நிலையில், அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நடந்து முடிந்த தேர்வை என்.டி.ஏ ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து மறுதேர்வானது வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மாணவர்களின் குறைகளைக் கண்டறிய பிரத்யேக இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ தேசிய தேர்வு முகமை (NTA) வலைதளம் மூலம் சரி பார்த்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்வு பாதுகாப்பான நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாகவும், தேர்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும், பல மாநிலங்களில் நீட் தேர்வுக்கான வினாத்தாள்களை தரை வழியே கொண்டு செல்லாமல் ஆகாய மார்க்கமாக, ராணுவ விமானங்களை பயன்படுத்தி கொண்டு செல்ல தேசிய தேர்வு முகமை முடிவு செய்தது.
அதன் அடிப்படையில் மதுரையில் இருந்து நெல்லைக்கு வினாத்தாள்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக மதுரை விமான நிலையத்துக்கு அஞ்சல் வாகனத்தில் வினாத்தாள்களை ஏற்றி, அதற்கு முன்னும் பின்னும் காவல் வாகனங்களின் பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள் கொண்டுசெல்லப்பட்டது.
மதுரை விமான நிலையம் அருகே வந்தபோது, வினாத்தாள் ஏற்றிச்சென்ற அஞ்சல் வாகனம் திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. உடனே காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 10 நிமிடத்திற்குள் பழுது ஏற்பட்ட வாகனத்திற்கு பதிலாக மற்றொரு வாகனத்தை வரவழைத்து உடனடியாக வினாத்தாள்களை எடுத்துச் சென்றனர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வினாத்தாள்கள் இந்திய ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ள நிலையில், அதற்கான ஒத்திகை திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

