மதுரை ஒத்தக்கடை - திருமங்கலம் இடையே ரூ.11,368 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம்

 
metro metro

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தால் 5 ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும் என மெட்ரோ திட்ட இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார்.

metro

மதுரையில் கடந்த 2022 ஆண்டு மெட்ரோ ரயில் ஆய்வுப் பணி நடைபெற்ற நிலையில், ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 32 கி.மீ.தொலைவுக்கு 27 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் எனத்தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை ஏற்கனவே அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய, ஹைதராபாத் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.11600 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

திருமங்கலம் - வசந்த நகர் வரை உயர் நிலை பாலமும், வசந்தநகர் - தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை 10 மீ. ஆழத்தில் பூமிக்கடியிலும், தல்லாகுளம் - ஒத்தக்கடை உயர்நிலை பாலம் கொண்ட வழித்தடம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 32 கி.மீ. தூரத்தில் 5 கி.மீ. சுரங்கப் பாதையிலும், எஞ்சிய 27 கி.மீ. தூரம் மேல்நிலை வழித்தடமாகவும் அமைக்க திடட்மிட்டுள்ளனர். 27 ரயில் நிலையங்களில் 3 சுரங்கப் பாதையில் அமைகிறது. மதுரை ரயில் நிலையம், பெரியார் பேருந்து நிலையத்தை ஒருங்கிணைத்து ஒன்றும், மீனாட்சி அம்மன் கோயில், கோரிப்பாளையம் என 3 சுரங்கப் பாதை ரயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதற்கான மண்பரிசோதனை மற்றும் மீனாட்சியம்மன் கோவில் பகுதிகளில் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தொடர்ச்சியாக 4முறை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் திட்டம் மேற்கொள்வது குறித்து மெட்ரோ திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக் தலைமையிலான குழுவினர் மதுரை ரயில்நிலையம் முன்பு ஆய்வு மேற்கொண்டனர். மதுரையில் அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தில், மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே வரும் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் இருப்பிடத்தை தேர்வு செய்வது குறித்த ஆய்வை மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக் IAS, மற்றும்  திட்டப்பணிகள் இயக்குநர் அர்ச்சுனன் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று இடத்தை ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தனர். ஏற்கனவே 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை ரயில் நிலைய விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் மெட்ரோ திட்டப்பணிகளை பாதிப்பின்றி மேற்கொள்வது குறித்து ஆய்வு நடத்தினர். விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒப்புதல் கிடைப்பதற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் துறை ரீதியான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மதுரையில் 31.93 கிமீ தொலைவுக்கு அமையவுள்ள மெட்ரோ வழித்தடத்தில், நிலத்திற்கு கீழே அமையும் 4.65 கிமீ தொலைவுள்ள சுரங்கப் பாதை வழித்தட பகுதியில் ஆய்வு செய்தனர். திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தால் பணி தொடங்கி முதல் மேல் மட்ட வழித்தடம் 3 ஆண்டுகளிலும், சுரங்கப்பாதை அமைக்க நான்கரை ஆண்டும் தேவைப்படும் என மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை பொறுத்த வரை போக்குவரத்துக்கு பாதிப்பின்றி வேலை செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளனர். மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் சித்திக் அளித்த பேட்டியில், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தால் 5 ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும், மதுரை ரயில் நிலைய விரிவாக்க பணிகளை கணக்கில் கொண்டு மெட்ரோ ரயில் திட்ட பணிகள் மேற்கொள்வதை சிரமமின்றி மேற்கொள்ள ஆய்வு நடத்தப்படுகிறது. மதுரை ரயில் நிலைய விரிவாக்கப்பணிகளால் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எந்த பாதிப்பும் வராது எனவும், திட்டத்திற்கு ஒப்புதல் தாமதம் என்ற விவகாரத்தை பற்றி எதையும் பேசவில்லை என கூறினார்.