மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை தேரோட்ட விழா!!
மதுரையில் நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றதை தொடர்ந்து, இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

மதுரையில் 22 நாட்கள் நடைபெற்று வரும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மீனாட்சியம்மன் கோவில் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை முதல் ஆவணி மாதம் வரை 4 மாதங்கள் மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை மாதம் வரை 8 மாதங்கள் சுந்தரேஸ்வரரும் மதுரையை ஆட்சி செய்வதாக நம்பிக்கை உண்டு. அதன் அடிப்படையில் மதுரையின் அரசியாக உள்ள மீனாட்சிக்கு முடிசூட்டும் விழா நடைபெற்று, திருக்கல்யாணம் தேரோட்டம் என மிக விமர்சையாக தொடர்ந்து திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கியுள்ளது. மாசி வீதிகளில் சிவனடியார்கள் மேளதாளம் முழங்கியும், பஞ்ச வாத்தியங்களை வாசித்தும் பக்தர்களை பரவசப்படுத்தினர். உலகப் பிரசித்தி பெற்ற மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் திருத்தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். மீனாட்சி அம்மன் ஒரு தேரிலும், சுந்தரேஸ்வரர் சுவாமி ஒரு தேரிலும் 4 மாசி வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.


