மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

 
சுங்கச்சாவடி

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு காலை 9 மணி முதல் நடைபெற்ற போராட்டம் 10 மணி நேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசால் இயங்கி வரும் நிலையில் , அமைந்த நாளிலிருந்து பல்வேறு பிரச்சனைகளை சுங்கச்சாவடி சந்தித்து வருகிறது. அதாவது நகராட்சி பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டருக்கு அப்பால் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் என்பது விதி , விதிக்கு மாறாக இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சுங்கச்சாவடி அமைத்துள்ளது திருமங்கலம் நகர் வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் இடையூறாக ஏற்பட்டது.

திருமங்கலம் வாகன ஓட்டிகளுக்கு முழு கட்டண விலக்கு கோரி பலமுறை போராடி வந்த நிலையில் , தற்போது 50 சதவீத கட்டணத்தை செலுத்த சுங்கச்சாவடி நிர்வாகம் திடீர் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து 300க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் , ஓட்டுநர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் இத்தொகுதியின் எம்எல்ஏவும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் இப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

காலை 9 மணி முதல் 10 மணி நேரமாக நீடித்து வந்த போராட்டத்தின் முடிவில், சுங்கச்சாவடி நிர்வாகத்தினரிடம் போராட்டக் குழுவும் ஆர் பி உதயக்குமாரின் ஆதரவாளர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில், வருகிற திங்கட்கிழமை முத்தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் எனவும் ,அதுவரை திருமங்கலம் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிப்பதாகவும் சுங்கச் சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அங்கிருந்து கலைந்து சென்றார். மேலும் 300-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளும் எழுத்துப்பூர்வமாக தங்களுக்கு அளிக்க வேண்டும் என 15 நிமிடம் வரை போராட்டத்தில் நீடித்த பிறகு , காவல்துறை அவர்களை களையச் செய்தனர் .இதனால் 10 மணி நேர போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.