மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு நிறைவு... 6,533 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்..

 
ஜல்லிக்கட்டு

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு நிறைவு பெற்றது.  போட்டிகளில் பங்கேற்க 6,533 பேர் விண்ணப்பித்திள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில்  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.  உலக பிரசித்திப்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளைக் கான ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசிப்பார்கள்.  அதேபோல் விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த  மாடுபிடி வீரர்கள் பங்கேற்பர். அதேபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காளைகள் பங்கேற்கும்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை  தயார் செய்யும் பணிகளை காளை உரிமையாளர்கள் பல மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டார்கள்.  தற்போது போட்டிக்கு  தயாராக இருக்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் குறிப்பிட்ட தினங்களுக்கு முன்பாக அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும்.  ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. இந்த ஆண்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் முன்பதிவு நேற்று  ஆன்லைனில் தொடங்கப்பட்டது.

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!

மாடுபிடி வீரர்கள் புகைப்படம், 2  தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் உள்ளிட்டவற்றை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்... இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்பதிவு நிறைவடைந்தது. தற்போது வரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 6,533 பேர் தங்கள் பெயர்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில்  4,534 காளை உரிமையாளர்களும், 1,999 மாடுபிடி வீரர்களும்  பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.