கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்களின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு, சாலை விபத்துக்களும் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்களின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வருங்காலங்களில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைக்க வருவாய்த்துறை அனுமதிக்க கூடாது எனவும், பட்டா இடங்களில் கம்பங்கள் அமைப்பது குறித்து அரசு உரிய விதிகளை உருவாக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.