மதுரை அரசு மருத்துவமனையில் இலவச உணவு வழங்க தடை.. நாங்கள் காரணமா? - நடிகர் சூரி தரப்பு விளக்கம்..

 
Soori

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவச உணவு வழங்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு தாங்கள்  காரணம் இல்லை என நடிகர் சூரி விளக்கமளித்துள்ளார். 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் , உள் நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் நட்சத்திர நண்பர்கள் என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மதிய உணவு வழங்கி வருகின்றனர். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் 200க்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக நட்சத்திர நண்பர்கள் அமைப்பினருக்கு அங்குள்ள நோயாளிகளுக்கு உணவு வழங்க அனுமதி வழங்கப்படுவதில்லை என்கிற புகார் எழுந்துள்ளது. 

இதற்கு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள நடிகர் சூரியின் அம்மன் உணவகம் தான் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அம்மன் உணவகத்தின் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காமல் விரட்டுவதாகவும் கூறினர். கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் வைரலான நிலையில், நடிகர் சூரி விளக்கமளித்துள்ளார்.  

madurai gh

நடிகர் சூரியின் அம்மன் உணவக நிர்வாக தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது, “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவச உணவு வழங்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு நாங்கள் காரணம் அல்ல. கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. அதனை ஒட்டியே வெளி வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

எங்கள் உணவகம் உள்ளே இருப்பதால்தான் இலவச உணவு வழங்குவதை தடுப்பதாக பொய்யான செய்தி பரவுகிறது. இனியும் அப்படி பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.