மதுரை ஆதீனத்திற்கு முன் ஜாமீன் - என்னென்ன நிபந்தனைகள் விதிப்பு?
தனது கார் விபத்து சம்பவத்திற்கு மத ரீதியாக சாயம் பூசிய விவகாரத்தில் மதுரை ஆதீனத்திற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த மே 2ம் தேதி சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை - சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதினம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாகவும், இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்திருந்ததோடு, தாடி வைத்திருந்தனர் என்றும் கூறியிருந்தார். ஆதினத்தின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலானதோடு, சர்ச்சையாகவும் வெடித்தது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மதுரை ஆதினம் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் மதுரை ஆதீனத்திற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கிய வழக்கில் நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆதீனம் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் அவர் வசிக்கும் இடத்திற்குச் சென்று போலீசார் விசாரிக்கலாம். விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும், வழக்கு விசாரணை முடியும் வரை சாட்சிகளை கலைக்கக் கூடாது, தலைமறைவாகக் கூடாது. மதுரை ஆதீனம் தலைமறைவானால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யலாம், ரூ.10,000 ரூபாய்க்கான இரு நபர் ஜாமினை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

