மதுரை எய்ம்ஸ் - சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

 
madurai aiims

மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான  சுற்றுச்சூழல் அனுமதிகோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பத்தை சமர்பித்தது.

மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக 2019-ம் ஆண்டு ஜன. 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். இன்னும் மருத்துவமனை கட்டி முடிக்கப்படவில்லை. இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி மட்டுமே நடந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்துடன் 2021-ம் ஆண்டு கடன் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், கட்டுமானப் பணிகளை தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கிறது. பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளாகியும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கப்படாமல் உள்ளது. 

இந்நிலையில் சமீபத்தில் மதுரை ஜல்லிக்கட்டு அரங்க திறப்பு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் மதுரைக்கு அறிவித்த கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. ஆனால், மதுரைக்கு மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்படாத ஒரு திட்டம் இருக்கிறது. அது உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை’ என்று எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கப்படாததைச் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பம் சமர்பித்துள்ளது. 

இதன்படி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர்  விண்ணப்பத்தை சமர்பித்துள்ளார். 221 ஏக்கரில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், அவரச சிகிச்சை பிரிவு, மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதி, பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளது.