"பொங்கல் பரிசுடன் ரூ.30,000 வழங்க வேண்டும்" - செல்லூர் ராஜூ
சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மற்றும் ஒருங்கிணைந்த அதிமுக தேர்தல் களத்தை சந்திப்பதையும் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
2025 புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, “2025 ஆம் ஆண்டு அதிமுகவிற்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட வன்கொடுமை இனி தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ அதிமுக ஆட்சி அமைய வேண்டும். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைவதையும் ஒருங்கிணைந்த அதிமுக தேர்தல் களத்தை சந்திப்பதையும் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார்.
தமிழக மக்களுக்காக அரசியலில் செயல்படும் கட்சியாக அதிமுக திகழ்ந்து வருகிறது என 63 சதவீத மக்கள் வாக்களித்து உள்ளனர். 2025 ஆண்டு அதிமுகவிற்கு எழுச்சி தருகிற ஆண்டாகவும் மகிழ்ச்சி தருகிற ஆண்டாகவும் திகழும். திமுக அரசு உண்மையாகவே மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்றால் ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். ஜல்லிகட்டில் மாடுபிடி வீரர்களுக்கு உரிய இழப்பீடும், காப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.