ஆதினம் போலீஸ் ஸ்டேஷன் பக்கமே வரக்கூடாதா? சட்டவிதி சொல்வது என்ன? செயலாளர் சொன்ன முக்கிய தகவல்
மதுரை ஆதினம் மீதுள்ள வழக்கில் அவரது சார்பில் செயலாளர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட விபத்து குறித்து பொய்யான தகவலை பரப்பியது தொடர்பாக மதுரை ஆதீனத்தின் மீது சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே மதுரை ஆதினத்திற்கு ஒருமுறை சம்மன் அனுப்பிய போது விசாரணைக்கு ஆஜராகாததால் மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் வீடியோ கான்பரன்சிங் மூலமாக தான் விசாரணைக்கு ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், நேரில் தனது செயலாளர் வழக்கறிஞருடன் ஆஜராகுவார் எனவும் மதுரை ஆதீனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அமைந்துள்ள சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மதுரை ஆதீனத்தின் சார்பில் அவரது செயலாளர் செல்வகுமார் வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் விளக்கம் அளித்து விட்டு வெளியே வந்த மதுரை ஆதீனத்தின் செயலாளர் செல்வகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜராகி முழு விளக்கத்தையும் அளித்ததாகவும், சம்பவம் நடந்த ஆண்டு மதுரை ஆதீனம் என்ன பார்த்தாரோ அதைத்தான் சொன்னதாகவும் ஆனால் வதந்தி பரப்பப்படுவதாக கூறுவதாக அவர் தெரிவித்தார். மதுரை ஆதீனம் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவரது தரப்பில் இருந்து யாரேனும் ஆஜரானால் போதுமானது எனவும் அவர் தெரிவித்தார். 7 நாட்கள் அவகாசம் கேட்டிருப்பதாகவும், ஆதீனம் நீதிமன்றத்திற்கு அல்லது காவல் நிலையத்திற்கோ செல்லக்கூடாது என ஆணை இருப்பதாகவும் அதை நேரில் ஆஜராகி தெளிவுபடுத்தி விட்டு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முழு விசாரணைக்கு அவர் சார்பில் நாங்கள் நேரில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் காவல்துறை அவகாசத்தை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆதீனம் ஆஜராகத் தேவையில்லை என அவரது வழக்கறிஞர் தரப்பில் காவல்துறையில் இருக்க சுட்டி காட்டப்பட்ட சட்ட விதி
((மதுரை ஆதினம் தமிழ் சமூகத்திற்கு ஆன்மிக பணியிலும் பொது பணியிலும் தன்னை அர்பணித்து கொண்டு வருகிறது. பொது பணிகளில் ஈடுபடுகின்றபோது சில இடர்பாடுகளை தவிர்ப்பதற்கு 1880-ம் வருடம் மதராஸ் மாகாணம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அது இதுகாறும் செயல்பாட்டில் இருந்து வருகின்றது. மதராஸ் மாகாண உத்தரவு : 2240, dated 15.09.1880 "Exemption for Religious Heads" (Aadheenam): Where its brief:- "If an Aadheenam(a head of a religious Institution), falls under the category of individuals who, according to the customs and manners of the country, should not be compelled to appear in Public, they may be exempt from personal appearance in Court".
இதன் அடிப்படையில் ஆதினத்திற்கென்று மரபு வழியில் விலக்குதல் (Exemption) 2 என்பதை தெரிவித்து கொள்வதோடு, காவல் நிலையத்தின் அழைப்பானையை மதிக்கும் பொருட்டு, ஆதினத்தின் சார்பாக ஆதினம் நியமித்த பிரதிநிதி ஒருவர் நேரில் அழைப்பானைக்கான அதன் விளக்கத்தை தருவார் என்பதை தெரிவித்து கொள்கிறோம். மேலும், மேற்படி விசாரனையின் பொருட்டு விளக்கங்கள் தேவைப்பட்டால். ஆதினமே கானொளி வாயிலாக விளக்க தர தயாராக உள்ளார் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். மேலும், கடந்த 03.07.2025-ம் தேதியன்று முறையான விளக்கத்துடன் கூடிய கடிதம், காவல்துறையின் உரிய உயரதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் காவல்துறையின் விசாரனைக்கு மேற் கூறியவாறு நாங்கள் ஒத்துழைக்க தயாராக உள்ளோம் என்பதனை இதன்மூலம் தெரிவித்து கொள்கிறோம்.))


