தேசிய மலரான தாமரையை அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி : வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்..!

 
1

இந்தியாவின் தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும், இது நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்தும் செயல் எனவும் கூறி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவரான காந்தியவாதி டி.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘பாரதிய ஜனதா கட்சிக்கான தேர்தல் சின்னமாக தாமரையை ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரி கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து, பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும்’ என கோரி இருந்தார் ரமேஷ்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்து வந்தது. மனுதாரர் தரப்பில், ”தாமரை தேசிய மலராக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகளும் அதை மாநில சின்னமாக அறிவித்துள்ளன. மேலும், தாமரை ஒரு மதச் சின்னம் என்பதால், பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும், சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படியும் தவறு. அத்துடன், அரசு சின்னங்களில் தாமரை இடம் பெற்றுள்ளதால் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது” எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம், சின்னங்கள் ஒதுக்கீடு தொடர்பான விதிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள்” வழக்கு எந்தத் தகுதியும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும், வழக்கில் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்காக மனுதாரர் செலுத்திய 20 ஆயிரம் ரூபாயில், 10 ஆயிரம் ரூபாயை சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு செலுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், மீதித் தொகையை மனுதாரர் திரும்பப் பெற அனுமதித்து உத்தரவிட்டனர்.