பதிவு செய்யாத ‘லிவ்-இன்’ ஜோடிகளுக்கு சிறை: மத்திய பிரதேசத்தில் புதிய சட்டம் வருகிறது..!!

 
Q

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல் படுத்தப்பட உள்ளது. இதற்காக, திருமணம், விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்ட குடும்ப விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்காகச் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு, இறுதி வரைவு அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

இதன் படி, திருமணம் ஆகாமல் கூட்டு வாழ்க்கை (லிவ் இன்) உறவில் இருக்கும் ஜோடிகள் கட்டாயமாக தங்களது உறவை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். அதாவது, ஒன்றாகச் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ள, வயது வந்தவர்கள் தங்களது பெயர் மற்றும் வயதினை உறுதிப்படுத்தும் ஆவணங்களைச் சமர்ப்பித்து, மாவட்ட பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும். பின்பு, பிரிய முடிவு செய்தால் அதையும் முறைப்படி பதிவு செய்து, உறவை ரத்து செய்ய வேண்டும்.

இந்த சட்டத் திருத்தத்தின் படி, கூட்டு வாழ்க்கையில் ஈடுபடும் நபர்கள் குறித்துப் பெற்றோர்களுக்குத் தகவல் அளிக்கப்படும். மேலும், உள்ளூர் காவல் நிலையங்கள் தங்கள் பகுதியில் பதிவு செய்யப்பட்ட அனைத்து கூட்டு வாழ்க்கை ஜோடிகளின் விவரங்களையும் பராமரிக்கும். பதிவு செய்யத் தவறினால் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். பதிவு செய்யப்படாத கூட்டு வாழ்க்கை உறவு குறித்துத் தெரிந்தால் அண்டை வீட்டார் அல்லது வீட்டு உரிமையாளர்கள் கூட புகார் அளிக்க அனுமதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின்றன

இந்நிலையில், மோகன் யாதவ் தலைமையிலான பாஜக மாநில அரசு, இந்த பொது சிவில் சட்ட மசோதாவை இன்று 20ம் தேதி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது.