மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- முதலமைச்சர் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டம்

 
VIJAY

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி முதலமைச்சர் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜய் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் 4 நாட்கள் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தொகுதிக்கு தலா இரு நாட்கள் என இரண்டு கட்டங்களாக பரப்புரை செய்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு தொகுதிகளிலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முதல்வர் விஜயின் திட்டமாக உள்ளது. அதுவும் எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுகவை   டெபாசிட் இழக்க செய்ய என்பதே விஜயின் திட்டமாக உள்ளது. அதற்கு ஏற்ப தனது பிரச்சார பயணங்களை வகுத்துள்ளார். 

இந்த பிரசாரத்தின் போது ரோடு ஷோவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் அதே நேரத்தில் வாக்காளர்களை கவரும் வகையிலும் தவெக  அரசின் 100 நாள் சாதனைகளை எடுத்துக் கூறியும் முதல்வர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் தமிழக வெற்றிகழகத்துக்கு செல்வாக்கு உள்ள நிலையில் நடுத்தர வயதினர் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்குகளை கவர்வதில் விஜய் தீவிரமாக உள்ளார். இந்த இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு அடுத்து வரும் ஐந்து சட்டமன்ற தொகுதிகள் தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிட தயங்கும் வகையில் அவரது செயல்பாடு இருக்கும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.